தமிழ் மக்களின் அரசியல் தீர்வை எட்ட கூட்டு நடவடிக்கை: ரெலோ
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கு கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக . தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தெரிவித்துள்ளது.
ரெலொவின் மத்தியகுழு கூட்டம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (17.10.2026) நடைபெற்ற போதே அதன் பேச்சாளர் சுரேன் குருசாமி இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தென்னிலங்கையில் உள்ளவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக அரசாங்கம் ஊழல் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
வாக்குறுதிகள்
இது வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும், தேர்தல் காலத்தில் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு ஜனாதிபதியும் அவரது கட்சியும் அளித்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.

புதிய அரசியல் சாசனத்தின் மூலம் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் என்று உறுதியளித்த அரசாங்கம், இன்று வரை அது தொடர்பாக எவ்வித முன்னேற்றத்தையும் முன்னெடுக்கவில்லை.
தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய பயணத்திற்காக, உள்ளூரில் இயங்கும் 6 தமிழ் பேசும் கட்சிகள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் உள்ள 5 கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய பரப்பில் உள்ள ஏனைய அரசியல் சக்திகளை ஒருங்கிணைத்து அழுத்தங்களை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வு
அத்துடன், பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து, சர்வதேச நாடுகளின் ஆதரவு மற்றும் அழுத்தத்தைப் பெற்று தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எட்ட கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கட்சிகள் தேர்தல்களைத் தாண்டி தமிழ் மக்களின் பொதுப் பிரச்சினைகளில் இணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து கொண்டதைப் போல, வரும் காலங்களிலும் தமிழ் மக்களின் உரிமை மற்றும் வாழ்வாதாரப் போராட்டங்களில் அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri