சிறைச்சாலைகளில் காணப்படும் சமிக்ஞை கருவியினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
சிறைச்சாலைகளில் காணப்படும் தொலைபேசி சமிக்ஞைகளை முடக்கும் 'ஜேமர்' கருவி சீறாக செயற்படாமையினால் சிறைச்சாலைகளின் சுற்றுவட்டார பகுதிகளிலும் சமிக்ஞை செயற்படவில்லை என தெரியவந்துள்ளது.
ஜூன் 09 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறைச்சாலைகளில் தொலைபேசி சமிக்ஞைகளை முடக்கும் பொறுப்பு தற்போது இராணுவத்தினரிடம் காணப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க கணக்குகள்
தற்போது இராணுவத்தின் சமிக்ஞை படையினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், துல்லியமாக செயற்படும் தொழில்நுட்பம் தற்போது வளர்ந்த நாடுகளில் காணப்படுவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுடன் உடனடியாக கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடாளுமன்றினால் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறைச்சாலைகளில் 11,762 கைதிகளுக்கு மாத்திரமே இடவசதி காணப்படுவதாகவும், தற்போது 26,791 கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளதாக நீதியமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் உடல் மற்றும் பொருட்களை சோதனை செய்ய பயன்படுத்தப்படும் 11 இயந்திரங்களில் 4 இயந்திரங்கள் செயற்படவில்லை என அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |