மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளை விடுவிக்க ரூ.30,000 கப்பம் கேட்ட பொலிஸார்
மட்டக்களப்பில் கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற ஒருவரிடம் போக்குவரத்து பொலிசார் 30 ஆயிரம் ரூபா கப்பம் வாங்கியதாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார்.
எனவே இதை வன்மையாக கண்டிப்பதுடன் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் இதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
தப்பியோடிய சந்தேக நபர்
மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (8) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பார் வீதி மட்டிக்கழி மீன் சந்தைக்கு அருகில் நேற்றையதினம்(8) மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்த நிலையில், வாகனத்தை செலுத்தியவர் கையடக்க தொலைபேசியை காதில் வைத்து பேசிக்கொண்டு பயணித்துள்ளார்.

இதன் போது எதிரே வந்த போக்குவரத்து பொலிசார் இவர்களை மறித்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி மோட்டார் பரிசோதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதை செலுத்தி வந்தவர் வெளிநாடு செல்ல இருப்பதால் அவர் பயத்தில் கையடக்க தொலைபேசியை பொலிசாரிடம் கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றவரிடம் ஓடியவர் வீட்டை காட்டுமாறும் இது யாருடையது என்று விசாரித்த நிலையில் அது அவருடைய தந்தையுடையது என தெரியவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
மோட்டார் சைக்கிளை கொடுத்து குற்றத்துக்கு 80 ஆயிரம் தப்பி ஒடிய குற்றத்திற்கு ஒரு இலட்சம் மொத்தமாக ஒரு இலச்சத்து 80 ஆயிரம் அபதாரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்து மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்துக்கு பொலிசார் கொண்டு சென்றுள்ளனர்.

அதன் பின்னர், மோட்டார் சைக்கிளை விடுவிக்க 60,000 ரூபாய் கப்பம் வழங்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் மீன் வியாபாரி ஒருவரின் ஊடாக குறித்த போக்குவரத்து பொலிஸாரை அணுகியுள்ளார்.
பேச்சுவார்த்தையின் பின்னர், கப்பத் தொகை 30,000 ரூபாயாக குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அந்த நபரிடம் பணம் இல்லாத காரணத்தால், தனது மனைவியின் காதணியை அடமானம் வைத்து 30,000 ரூபாயை பெற்றுள்ளார்.
பொலிசார் கப்பம்
பின்னர், அந்த பணத்துடன் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, கப்பமாக வழங்கியதாகவும், அதன் பின்னரே தனது மோட்டார் சைக்கிளை மீட்டுக்கொண்டதாகவும் பாதிக்கப்பட்டவர் எங்களிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

எனவே, மாவட்டத்தில் சில போக்குவரத்து பொலிஸார் இவ்வாறு கப்பம் கோரும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அதேவேளை, இவ்வாறான கப்பம் பெறும் நடவடிக்கைகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.
இது தொடர்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று அவர் தெரிவித்தார்.