தமிழ் கட்சிகள் பொது வேட்பாளர் விடயத்தில் ஒன்றுப்பட்டு செயற்பட வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து
தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளும் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் ஒன்றுப்பட்டு செயற்பட முன்வர வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தல்
"2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி மற்றும் தேர்தல்
ஆணையாளரினாலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரைகாலமும் தென்னிலங்கையில் இருந்து வந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களித்து வந்த போதிலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்பது தான் வரலாறாக இருக்கின்றது.
கடந்த காலத்தில் ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தவர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்திற்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்பட்டிருக்குமாக இருந்தால் நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடி கூட ஏற்பட்டிருக்காது தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காது தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய யுத்தம் தொடுக்கப்பட்டிருந்தது.
13 ஆவது திருத்தச்சட்டம்
தற்போது கூட அரசியலமைப்பில் இருக்கக்கூடிய 13 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதாக பேச்சுவார்தர்தைகளை நடத்திய ஜனாதிபதி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வரும் ஒரு வருடத்திற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை பற்றி ஆராயலாம் என தற்போது கூறியுள்ளார்.
இனப்பிரச்சினை தொடர்பாக இனிமேல் 2026 ஆம் ஆண்டு தான் கலந்துரையாடுவோம் என்பதே இதன் அர்த்தமாகும்.
குறைந்த பட்சம் 13 ஆவது திருத்தத்தையாவது நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காது எல்லாவற்றையும் 2026 ஆம் ஆண்டு வரை ஒத்திவைத்திருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இலட்சனத்தில் இவர்களுக்கு வாக்களித்து தமிழ் மக்கள் என்னத்தை சாதிக்கப்போகின்றோம் என்ற கேள்வி எழுகிறது.
நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்ற சமுதாயமாக இருக்க விரும்பவில்லை. இந்த அடிப்படையில் ஒட்டுமொத்த தமிழர் தரப்பு சேர்ந்து தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் ஊடாக சிங்கள தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர்களை தமிழ்த் தரப்புடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வரவைக்க முடியும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.
வடகிழக்கில் ஐந்து, ஆறு இலட்சம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். ஆகவே இந்த தமிழ் வாக்குகள் சிங்கள வேட்பாளர்களுக்கு தேவைப்படுமிடத்து தமிழ்த் தரப்புடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வரவேண்டிய களம் ஒன்றை உருவாக்க வேண்டிய கால தேவையின் அடிப்படையில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதென முடிவெடுத்துள்ளோம்.
ஜனநாய தமிழ்த் தேசிய கூட்டணியின் இந்த முடிவை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் இதற்கு சம்மதித்து வருவார்களாக இருந்தால் மிக விரைவாக தமிழ் தரப்பில் முன்னிறுத்தப்படும் பொது வேட்பாளர் யார் என்ற விடயத்தை ஆராய்ந்து சரியான ஒருவரை தெரிவு செய்யக்கூடியதாக இருக்கும்.
தமிழ்த் தரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்துவோமாக இருந்தால், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு களத்தை உருவாக்கி கொடுக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் ” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
