யாழ். மாநகரசபையின் சீரழிவு தமிழ் தேசியம் சிதைவுறுவதைக் காட்டுகின்றதா..!
நீண்ட ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்தி இரண்டு தலைமுறைகள் தந்தையும், மகனும், மகளும் என யுத்தத்தில் பங்கெடுத்து கட்டமைக்கப்பட்ட ஈழத்தமிழ் தேசியம் இப்போது சீரழிந்து, சின்னாப்பின்னமாக்கப்பட்டு சிதைவுப் பாதையில் வேகமாக பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.
அண்மைக் காலமாக யாழ்.மாநகரசபை அரசியல் இழுபறிகளும், நடைமுறைகளும் தமிழ் தேசியத்தின் சிதைவை இனங்காட்டுவதற்கு போதுமான உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
கடந்த 35 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை நடத்திய மக்கள் கூட்டம் பல்லாயிரம் உயிர்களைப் பலி கொடுத்து தனது தேசியத்தை கட்டமைத்து கட்டிக்காத்த தமிழ் இனத்தின் நிலைமை சீரழிவின் உச்சக்கட்டத்தில் நிற்பதை பார்க்கின்ற போது வேதனை தருகிறது.
அரசியல் அதிகாரங்கள்
இன்றைய நிலையில் ''ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'' என்பர் யாழ்.மாநகர சபையின் சீரழிவான நடைமுறைகளை தமிழ் தேசியத்தின் சிதைவினதும், சீரழிவினதும் ஒரு பருக்கையாக எடுத்துக்கொண்டு தமிழ் தேசியம் தன்னை புதுப்பித்தும், மறுசீரமைத்தும், மீள்கட்டுமானம் செய்ய வேண்டிய நிர்பந்தத்தை உணர்த்தி, வலியுறுத்தி நிற்கிறது.
இப்போது தமிழ் மக்களுக்கு தேசிய சிந்தனையே முக்கியமானது.
தென்னாசிய பிராந்தியம் இரண்டாம் உலகப் போரின் பின்னர் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற போது அரசியல் அதிகாரத்திற்காக பல நாடுகளாக பிரிந்தனவே தவிர தேசங்கள் என்ற அடிப்படையில் அவை நாடுகளாகப் பிரியவில்லை.
இப்பிராந்தியத்தில் எந்தப் பகுதியையும் தேசங்களாக வகுப்பது மிகக் கடினமான ஒன்றாகவே காணப்படுகிறது.
எனவே இந்தப் பிராந்தியத்தில் தேசங்கள் அல்லது தேசமென்று சொல்வதற்கு எந்த ஒரு நிலப்பரப்பிலும் குறிப்பிட்ட நில எல்லைக்குள் வாழ்கின்ற மக்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை, ஒருங்கிசையவுமில்லை என்பதை கடந்தகால வரலாறும், நிகழ்கால வரலாறும் நிரூபிக்கின்றது.
இங்கு தேசியம் என்பது ஒரு குறை பிரசவமாகவே இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரசவிக்கப்பட்டு விட்டது என்பதே வரலாற்று உண்மை.
இந்திய உபகண்டத்தில் வாழ்கின்ற மக்களின் தேசியம், ஜனநாயகம், மக்கட்பரம்பல் வாழ்வியல் என்பது 2000 சாதிகளால், மதங்களினாலும், உள்ளூர் பண்பாட்டுக் குழுக்களாலும் வெட்டித் துண்டாடப்பட்டு தனித்துவமாக இயங்கும் பிரம்மிட்டு வடிவிலான சாதிய அடுக்குமுறை சமூக அமைப்பை பெரிதும் கொண்டுள்ளது.
இதனால் இவர்கள் ஒரு தேசமாக இயங்குவதற்கு இக்குழு முறைமை பெருந்தடையாகவே உள்ளது.
இங்கு தேசியம், ஜனநாயகம் என்பன பேச்சு வடிவில் பேசப்பட்டாலும் நவீன ஜனநாயகம் என்ற அடிப்படையில் தேர்தல் என்று வருகின்ற போது சாதி, சமூக கட்டமைப்புக்கு உள்ளாலேயே தேர்தல்கள் அணுகப்படுகின்றன, நடைபெறுகின்றன என்ற அடிப்படையில் இங்கே ஜனநாயகம் நடைமுறையில் உள்ளதா என்பதை கேள்விக் குறியதோகவே தோன்றுகின்றது.
இத்தகைய சமூக அமைப்பில் ஜனநாயகமும் தேசியமும் அடிப்படையில் தோல்வியுற்றிருக்கிறன என்றே சொல்ல வேண்டும். இதனை இலங்கைத் தீவின் யாழ் மாநகர சபை அரசியல் தெளிவாக வெளிக்காட்டி நிற்கிறது.
குறிப்பாக ஈழத் தமிழருடைய தேர்தல் அரசியலில் யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண தொகுதி ஒரு தனி அடையாளம் கொண்ட விசேடமான வெளிப்பாடுகளைக் கொண்டிருப்பதை காணலாம்.
இங்கு எந்த ஒரு சாதி அமைப்பு அல்லது குழுக்களோ முதன்மை வகிக்க முடியாது. பல்தரப்பட்ட பிரிவினரை கொண்டுள்ள யாழ் மாநகர சமூகத்துக்குள் அரசியல் செய்வதென்பது தேசிய சிந்தனையுடன் சமூகங்களை கூட்டாக இணைந்தால் மாத்திரமே அங்கே நிலையான வெற்றியை பேண முடியும்.
தன்னாட்சி உரிமை
கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் மாநகரசபை நான்கு தடவை அதிகாரம் மாறி இருப்பதை பார்க்கின்ற போது அங்கே சமூக ஒருங்கிணைவிற்கு பதிலாக சமூக பிரிவினைகளும் சிதைவும் சீரழிவும் காணப்படுகிறது என்பது வெளிப்பாடுகிறது. இதுவே மாநகரசபை நடவடிக்கையின் சீரழிவிற்குக் காரணம் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த சாதிய, மத, பிரதேச, உள்ளூர் பண்பாட்டுக் குழு பிரிவினைகள் பின் தள்ளப்பட்டு தமிழ் தேசிய இனம் என்ற அடிப்படையில் தேசியம் தாயகம், தன்னாட்சி உரிமை என்பவற்றை முன்னிறுத்தி தமிழர்கள் ஒரு தேசியமாக, தொழிற்பட்டனர்.
ஆனால் இப்போது அவை களையப்பட்டு மீண்டும் முளைவிட்டு மேல் எழுந்து வரத் தொடங்கிவிட்டன.
இதனை யாழ் மாநகரசபை அரசியல் நடவடிக்கைகள் வெளிகாட்டுகிறது. இந்நிலை யாழ். மாநகர சபைக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழர் தாயக நிலப்பரப்பின் அனைத்து பகுதிகளின் அரசியல் நடவடிக்கைகளின் நிலைமையும் இவ்வாறுதான் உள்ளது.
ஆயுதப் போராட்டம்
நீண்ட போராட்டத்தின் மூலமும் பெரும் உயர்த்தியாகங்களின் மூலமும் கட்டமைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியம் தற்போது முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட போது ஏற்பட்ட பேரழிவை, பேரவலத்தைவிட இப்போது ஏற்பட்ட கொண்டிருக்கும் தமிழ் தேசிய சீரழிவு என்பது மிகப் பிரமாண்டமானது.
கடந்த 75 ஆண்டு கால தமிழர் தரப்பின் அரசியல் தோல்விகளை விடவும் மிகப் பலமான பின்னடைவுகளை இப்போது தமிழ் சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் தேசியத்திற்காக இரத்தம் தோய்ந்த பெரும் தியாகம் செய்த மக்கள் கூட்டத்தின் தேசிய உணர்வையும், தேசிய ஒருங்கிணைப்பையும், தேசியத்தையும் கேள்விக்குள்ளாக்கி புறந்தள்ளி அதனைக் கேலி செய்யும் அளவிற்கு தற்போது சாதீய, சமூக, பிரதேச ஒடுக்கு முறைகளும், பாகுபாடுகளும் முன்னிலைக்கு வர தொடங்கிவிட்டன.
தேசியத்துக்கு எதிரான அனைத்து அம்சங்களும் மேல் எழுந்து வளர்ந்து வருவதையும் அது ஈழத் தமிழர்களின் பண்பாட்டு (கலாச்சார) தலைநகரான யாழ்ப்பாண மாநகர சபையில் மிகத் துலாம்பரமாக வெளித் தெரிகிறது.
யாழ். மாநகர சபையின் மொத்த உறுப்பினர்கள் 45 ஆவர். இதில் தேசியக் கூட்டமைப்பு 21, மணிவண்ணன் அணி 10, டக்லஸ் தேவானந்தா அணி 9, தமிழ் காங்கிரஸ் 3 என்ற வரிசையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ரெலோ, புளோட் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சியைகள் வெளியேறியன் பின்னர் தமிழரசு கட்சி 16 உறுப்பினர்களை கொண்டுள்ளது.
மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு 23 உறுப்பினர்கள் தேவை. ஆனால் மாநகர சபையில் யாரும் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை. அவ்வாறு பெறவும் முடியாது.
பெறுவதும் கடினமானது ஏனெனில் யாழ். மாநகரத்துக்குள் இந்து, கிறிஸ்தவம் என மதப் பிரிவுகளுக்குள்ளாலும் பல துண்டங்களாக சாதிய அடிப்படையிலும் தொழில் ரீதியிலும் பிளவுபட்ட சமூகமாக இப்போது இயங்குகிறது.
இதன்மூலம் தமிழ் தேசிய சிந்தனை மழுங்கடிக்கப்பட்டுவிட்டது அல்லது உருவாகவில்லை என்ற துயரகரமான வரலாற்று உண்மையை யாழ். மாநகர சபை அரசியல் வெளிக்காட்டுகிறது.
ஆகவே மொத்தத்தில் தமிழினத்தின் அமைதிவழி, ஆயுதவழி போராட்டங்களின் பின்பும் தமிழ்த் தேசியம் தோல்வியைத்தான் அறுவடை செய்யத் தொடங்கி இருக்கிறது.
இது ஈழத் தமிழினம் அழிவை நோக்கிச் செல்கிறது என்பதைக் காட்டும் குறிகாட்டியும், அபாயச் சங்கொலி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே இதிலிருந்து ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய சமூகமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அவ்வாறு தமிழ் தேசியம் மீள்கட்டுமானம் செய்வதற்கு அறிவுபூர்வமாக ஆராய்ந்து ஈழத் தமிழினத்தை வழி காட்டுவதற்கு தமிழ் சமூகத்தில் தத்துவஞானிகள் தோன்ற வேண்டும்.
தத்துவ ஞானிகள் இல்லாத சமூகம் இந்தப் பூமிப்பந்தில் நிலைக்க முடியாது. உலகத்தமிழ் சமூகத்தில் ஒழுக்கவியல், அறம் சார்ந்த தத்துவஞானியான வள்ளுவருக்கு பின் கடந்த 2000 ஆண்டுகளாக தத்துவ ஞானிகளுக்கான வெற்றிடம் தொடர்ந்து நீடித்துச் செல்கிறது.
ஈழத் தமிழினம் சீரழிவில் இருந்து விடுபட்டு முன்னோக்கிச் செல்வதற்கு புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும், அரசியல் தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், கலைஞர்களும் ஒருங்கிணைந்து பலமான சிவில் சமூக அமைப்பை உருவாக்கி தமிழ் தேசியத்திற்கான தேசிய அடிக்கட்டுமானங்களை ஆரம்பிக்க வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும் என்பதை யாழ் மாநகரசபை சார்ந்த தமிழினத்தின் கையறுநிலை வெளிக்காட்டி நிற்கிறது.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
