அநுர அரசின் தேர்தல் கால யுக்தி
நாட்டில் யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், யாழ்ப்பாணத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த வீதியொன்று கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 10) கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை - பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி, சுமார் 35 வருடங்களின் பின்னர் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியானது கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது.
சில பாதுகாப்பு காரணங்களுக்காக..
இந்நிலையில் குறித்த வீதி திறக்கப்பட்டதை முன்னிட்டு, அந்த பிரதேச மக்கள் வீதியின் நுழைவாயிலுக்கு அருகில் பொங்கல் வைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.
எனினும், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் தமது கவலையை வெளியிட்டு வருகின்றனர்.
அதன்படி, சில பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த வீதியின் ஊடாக நடந்தும், மிதிவண்டியினூடாகவும் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வாகனங்களினூடான போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், காலை 06:00 மணிமுதல் மாலை 05:00 மணிவரை மாத்திரமே மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படும்.
குறித்த வீதியினால் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் நிறுத்துதல் வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நடைபயணம் மற்றும் பேருந்து தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரமே செல்ல முடிவதுடன் சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளமை ஆகிய விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை இவ்விதிமுறைகளை மீறுதல் சட்டவிரோதம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல்கள் நெருங்கும் போது..
மேலும், யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு காணியும் இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணி மற்றும் அதனுள் இருந்த கட்டடம் என்பவற்றை வலி கிழக்கு பிரதேச செயலரிடம் இராணுவத்தினர் கையளித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க தேர்தல் காலத்தில் இவ்வாறாக வீதி திறக்கப்பட்டமை குறித்து அரசியல் ஆய்வாளர்கள் இடையே ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதில் குறிப்பாக தேர்தல்கள் நெருங்கும் போது தான் வீதிகளை திறப்பீர்களா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி 35 வருடங்களின் பின் திறந்துவிடப்பட்டுள்ளமை தொடர்பில் சமூக ஊடக பக்கத்தில் பதிவொன்றின் மூலமே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அந்த பதிவில் “சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதியளித்தவர்கள் கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா? இந்த பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக சட்டபூர்வமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதியில்லை.
மாலை 06.00 மணியிலிருந்து காலை 05.00 மணிவரை போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்த சட்டம் உங்களிற்கு அனுமதிவழங்கியது. ஏன் பாதசாரிகள் இந்த வீதியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை என்றவாறாக அவர் தனது பதிவை இட்டுள்ளார்.
அதனை விட முக்கியமான கேள்வி, தேர்தல்கள் நெருங்கும் போது தான் வீதிகளை திறப்பீர்களா?” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
90 வீதமான காணிகள்
யுத்தக் காலப் பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.
பாதுகாப்பு அமைச்சின், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதில் ''ஏனைய காணிகளை நாங்கள் மீளாய்வுகளின் பின்னர் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்.
பூகோள ரீதியில் முக்கியத்துவமாக உள்ள காணிகளே விடுவிக்கப்படாது காணப்படுகின்றன. உடனடியாக விடுவிக்கக்கூடிய காணிகளை நாங்கள் விடுவித்துள்ளோம்.
முடியுமான காணிகளை நாங்கள் விரைவில் விடுவிப்போம். 90 வீதமான காணிகளை விடுவித்துள்ளோம். அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் மாத்திரமே விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.
அதிலுள்ள காணிகளை மீளாய்வு செய்து, இராணுவத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டிய காணிகளை வைத்துக்கொண்டு, எஞ்சிய அனைத்து காணிகளையும் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.'' என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் குறிப்பிடுகின்றார்.
ஏன் கடந்த கால ஆட்சியாளர்களால்...
இந்நிலையில் வடக்கு மக்களின் உணர்ச்சிகளுடன் மோசமான அரசியல் விளையாடுவதை தேசிய மக்கள் சக்தி நிறுத்த வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது உத்தியோக பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர் மேலும், "கடும் கட்டுப்பாடுகளுடன் யாழ்ப்பாணத்தில் பலாலி வீதியை திறக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை உண்மையிலேயே கவலையளிக்கிறது.
NPP must stop playing dirty politics with northern people’s emotions
— Namal Rajapaksa (@RajapaksaNamal) April 11, 2025
The government's move to open the Palaly Road in Jaffna with heavy restrictions is truly concerning. While the road was closed due to security threats, it seems obvious that the government has re-opened it… pic.twitter.com/A26egaz5J3
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக சாலை மூடப்பட்டிருந்தாலும், எந்தவொரு பாதுகாப்பு சரிபார்ப்பையும் பெறாமல் அரசாங்கம் அதை மீண்டும் திறந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
எனவே தான் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து அச்சுறுத்தல்களையும் புறக்கணித்து தேர்தலுக்கு முன்பு வாக்குகளைப் பெறுவதற்கான மற்றொரு நடவடிக்கையாக இது தெரிகிறது.
மேலோட்டமான விடயங்களைச் செய்வதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்றும், வாக்குகளை வெல்வதை மட்டுமே நினைத்து நாட்டின் பாதுகாப்பை முதன்மைப்படுத்த வேண்டும் என்றும் நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.
வீதிகள் திறக்கப்பட வேண்டுமானால், அது முழுமையான பாதுகாப்பு சரிபார்ப்புகளுக்குப் பிறகு செய்யப்பட வேண்டும், மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு அனைத்து தடைகளும் இல்லாமல் திறக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் ஒருபுறமிருக்க யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போதுள்ள அரசாங்கத்தால் இந்த நிலப்பரப்பை விடுவிக்க முடியுமாக இருக்கையில் ஏன் கடந்த கால ஆட்சியாளர்களால் இதை விடுவிக்க முடியாத சூழல் ஏற்பட்டது என்ற வினாவும் பரவலாக எழுப்பப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Rukshy அவரால் எழுதப்பட்டு, 13 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

தோட்டத்தில் புல் வெட்டியதற்காக வெளிநாட்டவருக்கு குடியுரிமை மறுப்பு: சுவிஸ் நீதிமன்றம் அதிரடி News Lankasri
