யாழ். போதனா வைத்தியசாலை கழிவுகள் தொடர்பில் அச்சம் தேவையில்லை: த. சத்தியமூர்த்தி (video)
யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (27.02.2023) நடந்த ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் பாதுகாப்பான முறையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள எரியூட்டியில் எரிக்கப்பட்டு வந்திருந்தது.
மருத்துவக் கழிவுகளை எரியூட்ட ஏற்பட்டுள்ள இடர்பாடுகள்
இதேநேரம் நாட்டில் ஏற்பட்ட கோவிட் சூழ்நிலை காரணமாக கோவிட் நோயாளர்கள் பாவிக்கும் அனைத்து உடைமைகளும் எரிக்க வேண்டிய நிலை காணப்பட்டதால் நாளாக அதிகளவில் மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் எரியூட்டி இயந்திரத்தில் ஏற்பட்ட திருத்த வேலை காரணமாக தொடந்து தெல்லிப்பழையில் எரிப்பதில் இடர்பாடான நிலை காணப்படுகிறது.
இப்போது நாம் வைத்தியசாலைக்கென தனியான ஒரு எரியூட்டி இயந்திரத்தினை பெற்று வைத்தியசாலைக்கு அண்மையில் அதனைப் பொருத்தி அதனை பாவிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு யாழ்ப்பாண மாநகர சபையுடன் கலந்துரையாடி கோம்பயன் மணல் பகுதியில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அமைத்து அதனை செயற்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் ஆளுநரின் செயலாளரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைக்கப்பட்டுள்ளது. கோம்பயன் மணல் பகுதியானது எரியூட்டி அமைப்பதற்கு பொருத்தமான இடம் இல்லை எனவும் மாற்று இடம் ஒன்றினை தெரிவு செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.
வடக்கு மாகாண ஆளுநருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட உள்ளோம் அதேபோல் அந்த நிலைமை கைகூடும் வரை வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தனியா நிறுவனங்கள் மூலம் எரிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எரியூட்டி நிலையத்தினை அமைத்து அதனை செயற்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி தேவைப்படும் அதேபோல மருத்துவ கழிவுகளை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வைத்தியசாலைகளில் தேங்க விடாது தனியார் நிறுவனங்களிடம கொடுத்து எரிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் இந்த மருத்துவ கழிவுகள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை.
விரைவில் தீர்வு
வளமை போல் வைத்தியசாலையில் சேவைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன வழமைபோல் பொதுமக்கள் நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொள்ள முடியும்.
எந்த ஒரு வைத்தியசாலையிலும் மருத்துவ கழிவு என்பது இன்றியமையாத ஒரு விடயமாகும் அதேபோலத்தான் யாழ். வைத்தியசாலையிலும் அவ்வாறான ஒரு நிலை காணப்படுகின்றது எனினும் அதற்கு விரைவில் நாங்கள் தீர்வினை பெற உள்ளோம்.
எனினும் விரைவில் எமது வைத்தியசாலைக்கென தனியான எரியூட்டி ஒன்று அமைப்பதற்குரிய முயற்சி முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்தி: தீபன்