இஸ்ரேல் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர்கள்.....! உலகை கதிகலங்க வைத்த போரின் சூத்திரதாரிகள்
அக்டோபர் 7ஆம் திகதி, அதிகாலையில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியது. அப்போதிருந்து, இராணுவத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இஸ்ரேலை அதிர்த்திக்குள்ளாக்கிய இந்த "ஆபரேஷன் அல்-அக்ஸா தாக்குதலை" திட்டமிட்டு ஏற்பாடு செய்தவர்கள் யார் என்றுதான் கேள்விகள் எழுந்தன.
காசாவை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பாலத்தீஸ்னிய ஆயுதக்குழுவான ஹமாஸின் உயர்மட்ட நபர்கள் பலர் ஊடகங்களின் முன் இதுவரை தோன்றியதே இல்லை. பல நேரங்களில் அவர்கள் இஸ்ரேலின் படுகொலை முயற்சிகளைத் தவிர்ப்பதற்காகத் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை தலைமறைவாகவே கழித்தனர்.
நாம் மிகவும் முக்கியமான தற்போதைய ஹமாஸ் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் இஸ் அல்-தின் அன்-குஸ்ஸாமின் பல்வேறு படைப்பிரிவுகளின் ராணுவத் தளபதிகள் குறித்த தகவல்களைப் பார்ப்போம்.
முகமது டெய்ஃப்
இவர் முகமது தியாப் அல்-மஸ்ரி, இவரது புனைப்பெயர் "அபு கலீத்" மற்றும் "அல்-டெய்ஃப்". ஹமாஸ் ஆயுதக்குழுவின் ராணுவப் பிரிவான ‘இஸ் அல்-தின் அல்-குஸ்ஸாம் பிரிகேட்ஸை’ இவர் தான் வழி நடத்துகிறார். இவர் 1965இல் காசாவில் பிறந்தவர்.
இவர் பாலத்தீனர்களுக்கு ‘மாஸ்டர் மைண்ட்’ என்றும், இஸ்ரேலியர்களுக்கு ‘மரணத்தின் மனிதன்’ என்றும் அறியப்படுகிறார். காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் உயிரியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள இவர், கல்லூரிக் காலத்தில் நடிப்பு மற்றும் நாடகத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக அறியப்பட்டார்.
அதன் காரணமாக, இவர் கல்லூரியில் ஒரு கலைக் குழுவையும் உருவாக்கியுள்ளார். ஹமாஸ் ஆயுதக்குழு உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது, அதில் எந்தத் தயக்கமுமின்றி அதில் சேர்ந்தவர் இவர். ஹமாஸ் ஆயுதக்குழுவின் ராணுவத்தில் பணியாற்றிய குற்றத்திற்காக, இஸ்ரேலிய அதிகாரிகள் இவரை 1989ஆம் ஆண்டு கைது செய்தனர்.
பின், சுமார் 16 மாதங்கள் எந்தவித விசாரணையுமின்றி சிறையில் இருந்தார். இவர் சிறையில் இருந்தபோது, இஸ்ரேலிய ராணுவத்தினரை கைப்பற்றும் நோக்கத்தோடு ஜகாரியா அல்-ஷோர்பாகி மற்றும் சலா ஷெஹாதே ஆகியோருடன் ஹமாஸிலிருந்து பிரிந்து தனியாக ஒரு இயக்கத்தை நிறுவ டெய்ஃப்(அல்-டீஃப்) ஒப்புக்கொண்டார்.
டெய்ஃப் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு ‘இஸ் அல்-தின் அன்-குஸ்ஸாம் பிரிகேட்ஸ்’ ஒரு ராணுவ அமைப்பாக மாறியது. டெய்ஃப் அதன் நிறுவனர்களில் ஒருவராகவும், கஸ்ஸாம் இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து சுரங்கப்பாதைகளை அமைத்தவர், டெய்ஃப். இவர்தான் அதிக எண்ணிக்கையிலான ராக்கெட்டுகளை ஏவுவதற்கான உத்தியை ஊக்குவித்தவர்களில் முதன்மையானவர்.
ஹமாஸ் வெடிகுண்டு தயாரிப்பாளரான யஹ்யா அய்யாஷ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைகளின் தொடர் திட்டமிடல் மற்றும் மேற்பார்வை செய்தல், 1996ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 50 இஸ்ரேலியர்களை கொன்ற பேருந்து குண்டுவெடிப்பு, 1990களின் நடுப்பகுதியில் மூன்று இஸ்ரேலிய ராணுவ வீரர்களைப் பிடித்து வைத்து கொலை செய்தது உட்பட இவர் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.
கடந்த 2000ஆம் ஆண்டில் இஸ்ரேல் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால் அவர் சிறைபிடித்தவர்களிடம் இருந்து தப்பித்தார். அதன் பின்னர், அவர் எந்தத் தடமுமின்றி தலைமறைவானார். டெய்ஃபின் மூன்று படங்கள் உள்ளன: ஒன்று மிகவும் பழையது, இரண்டாவது முகமூடி அணிந்திருப்பது, மூன்றாவது அவரது நிழலின் படம். கடந்த 2002ஆம் ஆண்டில் அவரது வாழ்க்கையில் மிகவும் மோசமான படுகொலை முயற்சியில், டெய்ஃப் அதிசயமாக உயிர் பிழைத்தார்.
ஆனால் அவர் தனது ஒரு கண்ணை இழந்தார். அவர் தனது ஒரு கால் மற்றும் ஒரு கையை இழந்ததாகவும், பல்வேறு படுகொலை முயற்சிகளுக்குப் பிறகு பேசுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. காசா பகுதியில் 2014 ஆம் ஆண்டில், 50 நாட்களுக்கும் மேலாக நீடித்த இஸ்ரேல் தாக்குதலின்போது, இஸ்ரேலிய ராணுவம் மீண்டும் இவரைப் படுகொலை செய்ய முயன்றது. ஆனால், அவர் அதில் இருந்தும் தப்பித்துவிட்டார்.
ஆனால், அவரது மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் அந்த முயற்சியின்போது கொல்லப்பட்டனர். "கோமாளி" என்ற நாடகத்தில் நடித்ததன் மூலம் அவர் "அபு கலீத்" என்ற புனைப்பெயரால் அறியப்பட்டார், அதில் அவர் உமையா மற்றும் அப்பாசிட் காலத்திற்கு இடையில் வாழ்ந்த ஒரு வரலாற்று நபரான "அபு கலீத்" பாத்திரத்தை ஏற்று நடித்தார். டெய்ஃப் என்பது "விருந்தினர்" என்பதற்கான அரபு மொழிச் சொல். இதுவ்தரு புனைப்பெயர், ஏனெனில் அவர் எந்த நேரமும் ஒரே இடத்தில் தங்குவதில்லை, ஒவ்வோர் இரவும் இஸ்ரேலிய படுகொலையிலிருந்து தப்பிக்க ஒரு புதிய இடத்தில் தூங்குகிறார்.
யாஹ்யா சின்வார்
முகமது டெய்ஃப்பின் மூளை என அடையாளம் காணப்படும் மர்வான் இசாவை நிழல் மனிதன் என இஸ்ரேல் கூறுகிறது. இவர் இஸ் அல்-தின் அல்-கஸ்ஸாம் ஆயுதக்குழுவின் துணைத்தளபதி. இவர் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் மற்றும் ராணுவப் பிரிவு உறுப்பினராகவும் உள்ளார்.
சிறுவயதிலேயே ஹமாஸுடன் இணைந்து செயல்பட்டதன் காரணமாக, "முதல் இன்டிஃபாடா" என அழைக்கப்பட்ட காலகட்டத்தின்போது, இஸ்ரேலிய ராணுவத்தினர் இவரை ஐந்து ஆண்டுகள் சிறை வைத்திருந்தனர். இவர் உயிருடன் இருக்கும் வரை, ஹமாஸுடனான தனது "மூளைப் போர்" என்று விவரிக்கும் விஷயம் தொடரும் என்று இஸ்ரேல் கூறுகிறது. மர்வான் இசா, எதையும் வார்த்தைகளால் சொல்பவர் அல்ல; செயலால் செய்து காண்பிப்பவர் என இஸ்ரேல் அவரை விவரிக்கிறது.
அவர் ஒரு புகழ்பெற்ற கூடைப்பந்து வீரராக உருவெடுத்தார். ஆனால் அவருக்கு விளையாட்டு வாழ்க்கை இல்லை, ஏனெனில் 1987இல் ஹமாஸ் இயக்கத்தில் சேர்ந்த குற்றச்சாட்டின் பேரில் இஸ்ரேல் அவரைக் கைது செய்தது. அதன் பிறகு, 1997இல் பாலத்தீனிய அதிகாரசபை அவரைக் கைது செய்தது.
2000ஆம் ஆண்டில் "அல்-அக்ஸா இன்டிஃபாடா" என்று அழைக்கப்படும் குண்டு வெடிப்பு வரை அவரை விடுவிக்கவில்லை. பாலத்தீனிய அதிகாரசபையால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகளில் ராணுவ பிரிவை மேம்படுத்துவதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். ஹமாஸ் இயத்தில் இவர் முக்கியப் பங்காற்றி வருவதால், இவர் இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றார்.
கடந்த 2006ஆம் ஆண்டில் டெய்ஃப் மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழவின் முக்கியத் தலைவர்கள் சந்திப்பின்போது, இஸ்ரேலியர்கள் மர்வான் இசாவை படுகொலை செய்ய முயன்றனர். இதில், அவர் காயமடைந்தார், ஆனால் இஸ்ரேலால் அவரைக் கொலை செய்ய முடியவில்லை. அவரது சகோதரிகள் 2014 மற்றும் 2021 இல் காசா மீதான படையெடுப்பின் போது உயிரிழந்தனர். அப்போது இஸ்ரேலிய போர் விமானங்கள் அவரது வீட்டை இரண்டு முறை அழித்தன.
இவரது புகைப்படத்தைப் பொறுத்தவரை, 2011ஆம் ஆண்டுக்கு முன்பு, பிணைக் கைதியாக இருந்த இஸ்ரேலிய ராணுவ வீரர் வீகிலாட் ஷாலித்துக்கு ஈடாக விடுவிக்கப்பட்ட கைதிகளின் வரவேற்பின்போது எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தில் மர்வான் இருந்தார்; ஆனால், அவரது முகம் சரியாகத் தெரியவில்லை. இஸ்ரேல் மீதான் பல்வேறு தாக்குதல்களில் இவரது பங்கு இருப்பது அனைவருக்கும் தெரியும்.
யாஹ்யா சின்வார்
ஹமாஸ் இயக்கத்தின் தலைவரும், காசா பகுதியில் உள்ள அதன் அரசியல் பிரிவின் தலைவருமான யாஹ்யா இப்ராஹிம் அல்-சின்வார் 1962இல் பிறந்தார். அவர் உள் பாதுகாப்பு விஷயங்களை நிர்வகிக்கும் “மஜ்த்” எனப்படும் ஹமாஸ் பாதுகாப்பு சேவையின் நிறுவனர். சந்தேகத்திற்குரிய இஸ்ரேலிய முகவர்களிடம் விசாரணைகளை நடத்துதல் மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு சேவை அதிகாரிகளையே கண்காணிப்பது போன்றவை இவரது பணி. சின்வார் மூன்று முறை கைது செய்யப்பட்டார்.
அதில், முதல் முறையாக 1982ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது, இஸ்ரேலிய ராணுவம் இவரை நான்கு மாதங்கள் நிர்வாகக் காவலில் வைத்திருந்தது. பிறகு, 1988இல், சின்வார் மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டு நான்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். சின்வார் சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்தபோது, இஸ்ரேலிய ராணுவ வீரர் கிலாட் ஷாலித்தின் டேங்கி ஹமாஸ் ஏவுகணைத் தாக்குதலால் தாக்கப்பட்டு, இஸ்ரேலிய ராணுவ பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டார்.
ஷாலித் "அனைவரின் மனிதன்" என்று அழைக்கப்பட்டார், எனவே இஸ்ரேல் அவரை விடுவிக்கத் தேவையான அனைத்தையும் செய்ய வேண்டியிருந்தது.
கைதிகளைப் பரிமாற்றும் "லாயல்டி ஆஃப் தி ஃப்ரீ" என்று அழைக்கப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஃபத்தா மற்றும் ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்த பல கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
அதில், 2011 இல் சின்வாரும் விடுவிக்கப்பட்டார்.
சின்வாரின் விடுதலைக்குப் பிறகு, அவர் ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவராகவும் அதன் அரசியல் பிரிவின் உறுப்பினராகவும் தனது பழைய நிலைக்குத் திரும்பினார்.
செப்டம்பர் 2015இல், அமெரிக்கா சின்வாரின் பெயரை "சர்வதேச பயங்கரவாதிகளின்" பட்டியலில் சேர்த்தது.
பிப்ரவரி 13, 2017 அன்று, இஸ்மாயில் ஹனியேவுக்கு பிறகு காசா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக சின்வார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்துல்லா பர்கௌதி
பர்கௌதி 1972இல் குவைத்தில் பிறந்தார். 1990இல் இரண்டாம் வளைகுடாப் போருக்குப் பிறகு ஜோர்டானில் வசித்து வந்தார்.
தென் கொரிய பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் பொறியியல் படிப்பதற்காக மூன்று ஆண்டுகள் சேrவதற்கு முன்பு ஜோர்டானிய குடியுரிமையைப் பெற்றார். பாலத்தீனத்திற்குள் நுழைய அனுமதி பெற்றதால் அவர் படிப்பை முடிக்கவில்லை.
ஒரு நாள் அவர் தனது உறவினரான பிலால் அல்-பர்கௌதியை மேற்குக் கரையின் தொலைதூரப் பகுதிக்கு அழைத்துச் சென்று தனது திறமைகளை வெளிப்படுத்தும் வரை, அவரைச் சுற்றியிருந்தவர்கள் யாருக்கும் அவர் வெடிபொருட்கள் தயாரிப்பதில் வல்லவர் எனத் தெரியாது. பிலால் தனது ராணுவத் தளபதியிடம் தான் பார்த்ததைக் கூறினார்.
அப்துல்லா பர்கௌதியை கஸ்ஸாம் படைப்பிரிவில் சேர அழைத்தனர். வெடி பொருட்கள் தயாரித்தல், உருளைக்கிழங்கில் இருந்து நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்தல், டெட்டனேட்டர்களை தயாரித்தல் ஆகிய பணிகளில் பர்கெளதி ஈடுபட்டார். பர்கௌதி தனது நகரத்தில் உள்ள ஒரு கிடங்கில் ராணுவ உற்பத்திக்காக ஒரு சிறப்புத் தொழிற்சாலையை நிறுவினார். இஸ்ரேலிய சிறப்புப் படைகளால் 2003இல் தற்செயலாக பர்கௌதி கைது செய்யப்பட்டார்.
பின், அவர் மூன்று மாதங்கள் விசாரணையில் இருந்தார். இஸ்ரேலில் நடந்த பல படுகொலைக்களுக்கு பர்கெளதி காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவருக்கு இஸ்ரேல் வரலாற்றில் மிக நீண்ட தண்டனையாக 67 ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன; அதாவது 5,200 ஆண்டுகள் சிறை தண்டனை.
அவர் சிறிது காலம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார், அதனால், அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். பர்கௌதி சிறைக்குள் இருந்து அந்தப் பெயரில் எழுதிய புத்தகத்தின் மூலம் "நிழலின் இளவரசன்" என்ற செல்லப்பெயரைப் பெற்றார். புத்தகத்தில் அவர் தனது வாழ்க்கை மற்றும் பிற கைதிகளுடன் அவர் மேற்கொண்ட கலந்துரையாடல்களை எழுதியிருந்தார்.