இஸ்ரேலுக்கும்- ஹமாஸிற்கும் இடையில் இறுதி கைதி பரிமாற்றம்: 4 உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்
காசாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பலவீனமான போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, கைதிகள் பரிமாற்றத்தைக் குறிக்கும் வகையில், ஒரே இரவில் நான்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை, ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.
2025, ஜனவரி 19 அன்று நடைமுறைக்கு வந்த போர் நிறுத்தம், ஏராளமான பின்னடைவுகள் இருந்தபோதிலும் பெரும்பாலும் நீடிக்கிறது.
எனினும் அதன் முதல் கட்டம் இந்த வாரம் முடிவடையவுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அதன் அடுத்த கட்டத்தின் தலைவிதி தெளிவாகத் தெரியவில்லை என்று சர்வதேச ஊடகம் ஒன்று கூறுகிறது.
பணயக்கைதிகளின் எச்சங்கள்
இந்தநிலையில், இரண்டாவது கட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாகவும், மீதமுள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான ஒரே வழி போர் நிறுத்தத்துக்கு மட்டுமே என்றும் ஹமாஸ் இன்று கூறியுள்ளது.
பல நாட்கள் முட்டுக்கட்டைக்குப் பின்னர், ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் இறுதி நான்கு பணயக்கைதிகளின் உடல்களை, ஹமாஸ் ஒப்படைப்பதை, இன்று, எகிப்திய மத்தியஸ்தர்கள் உறுதி செய்துள்ளனர். முன்னதாக, கடந்த சனிக்கிழமை, ஹமாஸ் ஆறு பணயக்கைதிகளை ஒரு மேடை நிகழ்வில் ஒப்படைத்த பிறகு இஸ்ரேல், தமது பிடியில் உள்ள கைதிகளை விடுவிக்க மறுத்துவிட்டது.
அதேநேரம், இன்றைய இறுதி ஒப்படைப்பிலும் அத்தகைய நிகழ்வு இடம்பெறவில்லை. இதற்கிடையில், நான்கு பணயக்கைதிகளின் எச்சங்கள் அடங்கிய சவப்பெட்டிகளை இஸ்ரேல் பெற்றதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் இன்று அதிகாலையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஒப்படைக்கப்பட்ட நான்கு உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அவர்கள் அனைவரும் 2023, அக்டோபர் 7, அன்று காசாவிற்கு அருகிலுள்ள கிபூட்ஸ் வீடுகளில் இருந்து கடத்தப்பட்டனர்.
இந்த உடல்கள், இஸ்ரேலிய பிரதேசத்தில் ஆரம்ப அடையாளத்திற்கு உட்படுத்தப்பட்டன.மேலும் செயல்முறை முடிந்ததும் பணயக்கைதிகளின் குடும்பங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழங்கப்படும் என்று நெதன்யாகுவின் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதல்
இதேவேளை இஸ்ரேலியரான ஷிரி பிபாஸ் என்பவருக்கு பதிலாக அடையாளம் தெரியாத பாலஸ்தீனப் பெண்ணின் எச்சங்களை ஹமாஸ் ஒப்படைத்தது. எனினும் , மறுநாள் சரியான உடலை வழங்குவதற்காக ஒப்படைப்பு ஒப்பந்தம் முன்னதாகவே நிறுத்தி வைக்கப்பட்டது.
அதேநேரம் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் வியாழக்கிழமை காசா மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இறுதி நான்கு உடல்களுக்கான மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய முழு தடயவியல் பரிசோதனை முடிவு, பின்னர் வெளிவரும் என்று இஸ்ரேலிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, விடுவிக்கப்படவுள்ள பாலஸ்தீன கைதிகளில் காசாவில் கைது செய்யப்பட்ட 445 ஆண்கள், 24 பெண்கள் மற்றும் சிறார்களும், இஸ்ரேலியர்கள் மீதான கொடிய தாக்குதல்களுக்காக ஆயுள் தண்டனை பெற்றுள்ள151 கைதிகளும் அடங்குவர் என்று ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
போர்நிறுத்தத்தின் முதல் கட்டத்தில் சுமார் 2,000 பாலஸ்தீன கைதிகள் மற்றும் கைதிகளுக்காக மொத்தம் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் பரிமாற்றம், மற்றும் காசாவில் உள்ள சில நிலைகளில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்கள் திரும்பப் பெறுதல் மற்றும் உதவிப் படைகள் வருகை ஆகியவை அடங்கும்.
ஆனால் 42 நாள் முதல் கட்ட போர் நிறுத்தம், எதிர்வரும் சனிக்கிழமையுடன் முடிவடையவுள்ளதால், மீதமுள்ள 59 இஸ்ரேலிய பணயக்கைதிகளில் மேலும் பலரை விடுவிக்கும் நீடிப்பு நடக்குமா அல்லது ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |