நேபாளத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இஷாரா செவ்வந்தி குழுவினர்
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினரை நேபாள அரசாங்கம் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை வழக்கில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் மற்றுமொரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் நேற்று நேபாளத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இஷாரா செவ்வந்தியுடன் மற்றைய சந்தேகநபர்களும் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் அறை இலக்கம் 5 நீதிமன்ற அறையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த கொலை கெஹல்பத்தர பத்மேவின் குழுவால் மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்தது.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை
கெஹல்பத்தர பத்மாவின் தந்தை கொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக கூறப்படும் சமிந்து தில்ஷான், தப்பிச்செல்லும் போது புத்தளம் பாலவியாவில் அன்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
இதன்பின்னர், விசாரணை அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சிசிடிவி கமராக்களை ஆய்வு செய்தபோது, துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியாக ஒரு பெண்ணும் வந்திருப்பது தெரியவந்தது.
சட்ட புத்தகத்தில், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை சம்பந்தப்பட்ட பெண் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.
அதன்படி, பொலிஸார் நடத்திய விசாரணைகளில், அவர் மினுவாங்கொடையைச் சேர்ந்த இஷாரா செவ்வந்தி என்ற பெண் என அடையாளம் காணப்பட்டார்.
இதனையடுத்து இஷாரா செவ்வந்தி தலைமறைவாகி படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்சென்று நேபாளத்திற்கு சென்று மறைந்திருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
இவருடன், இலங்கை சேர்ந்த ஜீவதாசன் கனகராசா (33), தக்சி நந்தகுமார் (23), தினேஷ் சியமந்த டி சில்வா (49), கென்னடி பஸ்திம்பிள்ளை (35) மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம் ஆச்சிர்ச்சாகே (43) ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இஷாரா செவ்வந்தியை அழைத்து வர நேபாளத்துக்கு விசேட அதிரடிப்படையினர் விரைந்த நிலையில், அந்நாட்டின் தூதரகம் கூட இதில் ஆர்வம் காட்டி இவர்களை நாடு கடத்தியுள்ளது.
இதன்படி 'காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகமும் இந்த சம்பவத்தில் ஆர்வம் காட்டியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



