தமிழ் பேசும் மக்களை நாட்டிலிருந்து விரட்டுவதா இந்த அரசின் நோக்கம்?- சுரேஷ் கேள்வி
"தமிழர்களையும்,முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வது தான் அரசின் நோக்கமா? என ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஒரு நாடு ஒரு சட்டம் என்பது தொடர்பாக ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை போன்ற பல மொழிகள் பல மதங்கள் பல கலாசாரங்கள் கொண்ட வேறுபட்ட இனங்கள் வாழக்கூடிய நாட்டிலே பல்வேறு விதமான சட்ட திட்டங்கள் இருப்பது என்பது இயல்பானது.
உலகத்திலும் பல்வேறுபட்ட சட்டங்கள் இருக்கின்றன. அமெரிக்காவின் சில மாநிலங்களில் மரண தண்டனை சட்டம் இருக்கின்றது. சில மாநிலங்களில் இல்லை. இலங்கையிலும் கூட யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம், ஷரியாத் சட்டமென ஒவ்வொரு சட்டங்கள் காணப்படுகின்றன.
இது இன்று நேற்றல்ல. நீண்டகாலமாக வழிவழியாக வந்த சட்டங்களே அவை. அது இன்றுவரை நடைமுறையில் இருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் தான் ஜனாதிபதியால் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் அடிப்படையிலேயே இலங்கையினுடைய மிக மோசமான இனவாதி எனக் கூறப்படும் ஞானசார தேரரின் தலைமையில் ஒரு செயலணி உருவாக்கப்பட்டிருக்கின்றது.
பர்மாவில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட போது அதற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டவர் இவரே. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை தொடர்ச்சியாக பேசிக்கொள்ளக் கூடியவர் இவர்.
இவர் முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலைத் தகனம் செய்தவர். நீதிமன்றத்தின் கட்டளைகளை ஏற்க மறுத்ததன் காரணமாக அவரை நீதிமன்றம் தண்டித்து சிறைத் தண்டனை வழங்கி இருந்தது. அதன் பின்பு பொதுமன்னிப்பில் விடுதலையானார்.
இவ்வாறான ஒருவரது தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்று பேசுகின்றபோது கேலியாகவும் சிரிப்புக்கிடமாகவே காணப்படுகின்றது. இந்த நாடு எதனை முன்னெடுத்துச் செல்கின்றது என்பது பெரிய கேள்வியாக இருக்கின்றது.
மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும்,முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வதுதான் இவர்களது நோக்கமா என்கின்ற கேள்வி எழுகின்றது.
ஒரே நாடு ஒரே சட்டம் மாகாண சபைகளை இல்லாமல் செய்கின்ற, மாகாண சபைகளுக்கு சட்டமியற்றும் உரிமையை இல்லாமல் செய்கின்ற அடிப்படையில் இவ்வாறான ஒரு புதிய முயற்சியை உருவாக்குகிறார்களா என்ற கேள்வி எழுகின்றது.
ஜனாதிபதி பதவிக்கு வந்தபொழுது சிங்கள பௌத்தத்தை பாதுகாப்பதே எனது கடமை என்றார். சிங்கள பௌத்தத்தை பாதுகாத்தல் என்பது வேறு, தமிழ், முஸ்லிம் இனங்களை, அவர்களது கலாசாரங்களை, சட்டதிட்டங்களை, நடைமுறைகளை இல்லாமல் செய்வதென்பது வேறு.
அரசு இப்போது எடுக்கக்கூடிய முயற்சி என்பது தேசிய இனங்களான வடக்கு, கிழக்கு தமிழர்களாக இருக்கலாம், முஸ்லிம்களாக இருக்கலாம், மலையகத் தமிழர்களாக இருக்கலாம் அவர்களுக்கான பண்பாடு, கலாசாரம் என்பதை இல்லாமல் செய்து, இது சிங்கள பௌத்த நாடு என்ற அடிப்படையில் இந்தச் சட்டங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனவா என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கின்றது.
இவ்வாறான செயலணியில் தமிழர்கள் இல்லை என்று பலரும் கூறுகின்றனர். இவ்வாறு நியமிக்கப்படுபவர்களின் நோக்கம் என்ன? அரசின் சொல்லுக்கு தலையாட்டுபவர்களே? இதிலே முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டு இருந்தாலும்கூட முஸ்லிம்களுக்கு இதனால் உபகாரங்கள் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.
தங்களுக்கு தலையாட்ட கூடிய
சிலரை நியமித்து எதனையும் சாதிக்கப் போவது கிடையாது. இது கண்டிக்கப்பட
வேண்டியதுடன் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri