விமான சேவைகள் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் பல விமானங்கள் இரத்து செய்யப்படலாம் என சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவ்வாறு பரப்பப்படும் பொய்யான தகவல்களை சரி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி
இலங்கையின் எரிபொருள் தட்டுப்பாடு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கும் மேலாக தகுந்த மாற்றங்களுடன் தங்கள் விமான அட்டவணையை நிர்வகிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதாக ஸ்ரீலங்கன் விமான சேவை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமைகளை நிர்வகிக்க விமான அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு விமான நிலையங்களில் எரிபொருள் பெற தொழில்நுட்ப நிறுத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
விமான சேவைகளில் மாற்றம்
அதற்கமைய, சில விமானங்களின் நேரம் மற்றும் கால அளவுகளில் சில மாற்றங்கள் இருக்கலாம் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் அட்டவணை திருத்தங்களின் தாக்கம் இல்லாத வகையில்கிட்டத்தட்ட 100 சதவீத செயல்திறனுடன் விமான அட்டவணையை இயக்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த இக்கட்டான நேரத்தில், திட்டமிடப்பட்ட விமானச் செயற்பாடுகளை எவ்வித இடையூறும் இன்றி நடத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கிறது.