பசில் ராஜபக்ச பிரதமர் பதவிக்கு பொருத்தமானவரா? ஆளும் கட்சியின் உறுப்பினரின் கருத்து
நாட்டின் பிரதமர் பதவிக்கு பசில் ராஜபக்ச பொருத்தமானவரா இல்லையா என்பது பற்றி தன்னால் எதனையும் கூற முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார (Jagath Kumara)தெரிவித்துள்ளார்.
வலையெளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
பிரதமர் பதவி அல்லது ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யக் கூடிய தகுதியான சில தலைவர்கள் கட்சிக்குள் இருக்கின்றனர். எனினும் அவர்களின் பெயர் விபரங்களை தற்போது வெளியிட முடியாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் தற்போதைய சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தில் இருந்து விலகினால், மேலும் பலர் அவர்களுடன் அரசாங்கத்தில் இருந்து விலகுவார்கள்.
இதனால், அரசாங்கம் செய்ய வேண்டியது, அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களை விரட்டும் செயலை அல்ல. அவர்களுடன் இணைந்து முன்நோக்கி செல்ல வேண்டும்.
தற்போதைய அரசாங்கத்தை அழித்தமைக்கான பொறுப்பை சில அரச அதிகாரிகள் ஏற்க வேண்டும். சில அரச அதிகாரிகள் அமைச்சர்களின் உத்தரவுகளை மாத்திரமல்ல, ஜனாதிபதியின் உத்தரவைக் கூட மதிக்காது, அரசாங்கத்தின் செயற்பாடுகளை செயலிழக்க செய்து, நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாகி அரசியல் சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமையை நான் தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கின்றேன். எனினும் தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது அரசாங்கத்திற்கு பாதிப்பானது.
கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால், எதிர்காலத்தில் அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் மீது மக்கள் கல் வீச்சு தாக்குதல் நடத்துவார்கள் எனவும் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.
