ஈரான் போரினால் அமெரிக்காவிற்கு 40 டொலர் பில்லியன் டாலர் இழப்பு
ஈரான் போரினால் அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு சுமார் 40 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக 'சென்டர் ஃபார் ஸ்ட்ரேட்டஜிக் அண்ட் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ்' அமைப்பின் ஆரம்பக்கட்ட ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 40 பில்லியன் டொலர் மதிப்பில் வெடிபொருட்கள், அழிக்கப்பட்ட இராணுவ தளவாடங்கள் மற்றும் சேதமடைந்த இராணுவ முகாம்களின் செலவுகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், 2026 நிதியாண்டின் 1 டிரில்லியன் டொலர் வரவு செலவுத் திட்டத்தில் ஏற்கனவே சேர்க்கப்பட்ட செயல்பாட்டுச் செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை என அமைப்பின் சிரேஸ்ட ஆலோசகர் மார்க் கான்சியன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறை தவிர, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் முன்னாள் இராணுவ வீரர் விவகாரங்கள் போன்ற இதர அரசு நிறுவனங்களுக்கும் கூடுதலாக 1 பில்லியன் டொலர் செலவாகியுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு கேலன் எரிபொருள் விலை சராசரியாக 3 டொலருக்கும் குறைவாக இருந்தது.
ஆனால், போரின் போது அது 4 டொலருக்கும் அதிகமாக உயர்ந்தது. பிரவுன் பல்கலைக்கழகத்தின் (Brown University) எரிசக்தி செலவுக் கண்காணிப்பு அமைப்பின்படி, போர் இல்லாதிருந்தால் மக்கள் செய்திருக்கக்கூடிய செலவை விட, தற்போது ஒவ்வொரு அமெரிக்கக் குடும்பமும் சராசரியாக 253 டொலர் கூடுதலாகச் செலவழித்துள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களாக மத்திய கிழக்கிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக, உலகளவில் 1.15 பில்லியன் பீப்பாய் எண்ணெய் விநியோகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக 'கெப்லர்' நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வால், அமெரிக்காவின் ஆண்டு பணவீக்க விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தொழிலாளர் புள்ளியியல் அலுவலகம் (BLS) தெரிவித்துள்ளது. மக்களின் சம்பள உயர்வை விட விலைவாசி உயர்வு மிக வேகமாக உள்ளது.