இஸ்ரேல் உளவு அமைப்பு மொசாட் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்
ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் அமைப்பின் தலைமை அலுவலகத்தை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் தாக்குதலினால் உள்ளூர் தொழிலதிபர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குர்திஸ்தானின் அர்பில் பகுதியில் அமெரிக்க தூதரகக் கட்டிடத்தின் அருகே அமைந்துள்ள மொசாட் உளவுத்துறை அலுவலகம் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதல் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதிலடி கொடுக்கும் ஈரான்
இந்நிலையில் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானின் பாதுகாப்புப் படையான புரட்சிகர காவல் அமைப்புகள் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
அதில் “சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத குழுக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினோம்.
ஈரானுக்கு எதிராக உளவு வேலைகளை செய்துவந்த இஸ்ரேலுக்குச் சொந்தமான மொசாட் உளவு அமைப்பின் தலைமையகத்தை தாக்கி அழித்தோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு கண்டனம்
இதற்கு முன்னதாக இம்மாத தொடக்கத்தில் ஈரானில் நடந்த காசிம் சுலைமாணி நினைவேந்தல் நிகழ்வில் நடந்த குண்டு வெடிப்பில் 80 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டதுடன் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை ஈரான் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இது பொறுப்பற்ற செயல் என்று கூறியிருப்பதுடன், கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |