வெடிவச்சகல்லில் தடுத்து நிறுத்தப்பட்ட பாரிய ஆக்கிரமிப்பு முயற்சி
வவுனியா வடக்கு, வெடிவச்சகல்லு கிராம அலுவலர்பிரிவில் திரிவைச்சகுத்தை அண்டிய பகுதியில் 1000 ஏக்கர் வரையில் காடுகளை அழித்து ஆக்கிரமிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனது தலையீட்டையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வனவளத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை என்பன இணைந்து சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
ரவிகரன் தலைமையிலான குழுவினர் மகாவலி அதிகாரசபை மற்றும் வனவளத்திணைக்களம் ஆகிய தரப்பினரை நேற்று (16.07.2025) நேரடியாக சந்தித்து இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புத் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து வினவியிருந்தனர்.
சட்டவிரோத காடழிப்பு
இதன்போது சட்டவிரோதமாக பாரிய அளவில் சட்டவிரோத காடழிப்பை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு முயற்சியை மேற்கொண்டவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டவிரோத செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவில், வெடிவச்சகல்லு கிராம அலுவலர் பிரிவிலுள்ள திரிவச்சகுளம் பகுதியில் தமிழ் மக்களுக்குரிய விவசாய நிலங்களை பெரும்பான்மை இனத்தவர்கள் ஆக்கிரமித்து அங்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை மற்றும் திரிவச்சகுளம் பகுதியை அண்டியுள்ள பாரிய அடர்வனப்பகுதிகள் 1000 ஏக்கர் வரையில் பெரும்பான்மை இனத்தவர்களால் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அப்பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக கடந்த 07.07.2025அன்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தார்.
குறித்த களவிஜயத்தினைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நெடுங்கேணி வனவளத் திணைக்கள உத்தியோகத்தரிடம் அடர்வனங்கள் பாரிய அளவில் அழிக்கப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த நிலையில், குறித்த திரிவைச்சகுளம் பகுதியும், அதனைஅண்டியுள்ள அடர் வனங்கள் அழிக்கப்பட்டுள்ள பகுதியும் மகாவலி அதிகாரசபைக்குரியது என வனவளத் திணைக்கள உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை அடர்வனம் அழிக்கப்பட்டமை தொடர்பில் நேரடியாகச் சென்று பார்வையிட்டு அது தொடர்பில் தம்மால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் நெடுங்கேணி வனவளத்திணைக்கள உத்தியோகத்தரால் இதன் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேரடியாக பார்வையிடப்பட்ட நிலைமை
இந்நிலையில் இதுதொடர்பில் மகாவலி அதிகாரசபை மற்றும் வனவளத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில், வவுனியா வடக்கு உபதவிசாளர் வி.சஞ்சுதன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.கிரிதரன், வவுனியாவடக்கு பிரதேசசபை உறுப்பினர் து.தமிழ்செல்வன், திரிவச்சகுளம் பகுதிக்குரிய தமிழ்மக்கள் ஆகியோர் அடங்கலான குழுவினர் வெலிஓயா பகுதியிலுள்ள மகாவலி அதிகாரசபையின் மகாவலி (எல்) வலய வதிவிடத் திட்ட முகாமையாளர் காரியாலயத்திற்கும், நெடுங்கேணி வனவளத்திணைக்கள அலுவலகத்திற்கும் நேரடியாகச் சென்று நிலமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.
குறிப்பாக திரிவைச்ச குளம் பகுதியில் தமிழ்மக்களின் காணிகள் பெரும்பான்மையின மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், அதனை அண்டியபகுதியில் அடர்வனப்பகுதிகள் 1000 ஏக்கர் வரையில் பெரும்பான்மை இனத்தவர்களால் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் இதன்போது மகாவலி அதிகாரசபையின் (எல்) வலய திட்ட அதிகாரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது மகாவலி (எல்) வலயத் திட்ட அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், திரிவைச்சகுளம் பகுதியில் தமிழ் மக்கள் தமது பூர்வீககாணிகள் என உரிமை கோரும் பகுதியை மகாவலி அதிகாரசபை 10பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஒரு போகத்திற்கு நெற்செய்கை மேற்கொள்வதற்கு குத்தகை அடிப்படையில் வழங்கியதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. குறித்த பகுதி மற்றும் அதனை அண்டிய 1000ஏக்கர்வரையில் பெரும்பன்மை இனத்தவர்களால் அடர்வனங்கள் அழிக்கப்பட்ட பகுதி என்பன மகாவலி ( எல்) திட்டத்தின் கிவுல் ஓயாத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆகவே குறித்த கிவுல் ஓயாத் திட்டத்தினூடாக அப்பகுதியில் பாரியஅணைக்கட்டொன்று அமைக்கப்படவுள்ளதாகவும், அவ்வாறு அமைக்கப்படுகின்ற அணைக்கட்டின் நீரேந்துப் பகுதியில் குறித்த திரிவைச்சகுளம் மற்றும் அதனை அண்டிய அழிக்கப்பட்ட அடர்வனப் பகுதி உள்வாங்கப்படுமெனவும் இதன்போது மகாவலி அதிகாரசபை அதிகாரியால் சுட்டிக்காட்டப்பட்டது.
காணிகளை மீளப்பெற நடவடிக்கை
எனவே பெரும்பான்மை இனத்தவர்கள் பத்து பேருக்கு திரிவைச்சகுளம் பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு நெற்செய்கைக்காக மகாவலி அதிகாரசபையால் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணிகளை மகாவலி அதிகாரசபை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
அந்தவகையில் குறித்த காணிகளை மகாவலி அதிகாரசபை மீளப்பெறுவதற்கு நீதிமன்றில் வழக்குத்தொடரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்தோடு பெரும்பான்மை இனத்தவர்களால் அழிக்கப்பட்ட அடர்வனப்பகுதி தொடர்பில் வனவளத் திணைக்களத்துடன் இணைந்து வழக்குக்குத் தொடரவுள்ளதாகவும் இதன்போது தெரியப்படுத்தப்பட்டது.
இதன்போது இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பதிலளிக்கையில், இவ்வாறு மகாவலி அதிகாரசபை தமது திட்டங்களை மேற்கொள்ளும்போது எமது தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்யமுடியாதெனத் தெரிவித்தார்.
திரிவைச்சகுளம் தமிழர்களின் பூர்வீக விவசாயநிலமெனச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், கிவுல் ஓயாத் திட்டத்தில் குறித்த பகுதி முழுவதும் நீரேந்துப் பகுதியானால் அந்தப்பகுதிக்குரிய தமிழ் மக்களின் நிலை என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.
எனவே இந்த நிலமைகளை ஆராய்ந்து செயற்படுமாறும் மகாவலி அதிகாரசபை அதிகாரியை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தினார். அத்தோடு பெரும்பான்மை இனத்தவர்களால் அடர்வனப் பகுதி அழிக்கப்பட்ட விடயத்தில் குற்றவாளிகள் உடனடியாகத் தண்டிக்கப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மகாவலி அதிகாரசபை அணிகாரியை வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான குறித்த குழுவினர் நெடுங்கேணி வனவளத்திணைக்கள அலுவலகத்திற்குச்சென்றனர். அங்கு வனவளத்திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரால் கேள்விஎழுப்பப்பட்டது.
இதன்போது நெடுங்கேணி வனவளத் திணைக்கள அதிகாரி பதிலளிக்கையில், கடந்த 07.07.2025 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் திரிவைச்சகுளம் பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்டு தம்மிடம் முறைப்பாடு வழங்கியதற்கமைய, தாம் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டதாகவும், 1000 ஏக்கர் வரையில் அடர்வனப்பகுதிகள் அழிக்கப்பட்டிருப்பதை தாமும் உறுதிப்படுத்திக்கொண்டதாக நெடுங்கேணி வனவளத்திணைக்கள உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு குறித்த அடர்வனப்பகுதி அழிக்கப்பட்டமைக்கு நீதிமன்றில் கடந்த 08.07.2025அன்று தம்மால் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், திரிவைத்தகுளத்தின்கீழ் நெற்செய்கைமேற்கொள்ளும் பெரும்பான்மை இனத்தவர்களையே எதிராளிகளாக இந்த வழக்கில் தம்மால் பெயர்குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வலியுறுத்தப்பட்ட விடயம்
இந்நிலையில் வனவளத்திணைக்களம் தொடர்ந்தும் இந்த விடயத்தில் வலுவான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் வலியுறுத்தப்பட்டது. மேலும் இதனைத்தொடர்ந்து தமிழர்களின் பூர்வீக திரிவைத்த குளம்பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு விவசாயக்காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட விடயம்தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தலைமையிலான குறித்த குழுவினரால் ஆராயப்பட்டது.
அவ்வாறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் குறித்த பகுதியை மகாவலி அதிகாரசபை குத்தகை அடிப்படையில் ஒருபோகத்திற்கு பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த பத்துப்பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதும், அதன்பிற்பாடு குறித்த அந்தர்வெவ கமக்கார அமைப்பாக பதிவுசெய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
அத்தோடு குறித்த பகுதியை நெடுங்கேணி கமநலசேவைநிலயம் அளவீடுகளை மேற்கொண்டு பெரும்பான்மை இனத்தவர்களின் அந்தர்வெவ கமக்கார அமைப்பாக பதிவுசெய்வதற்கு வெடிவைத்தகல்லு கிராமஉத்தியோகத்தர், வவுனியாவடக்கு பிரதேச செயலர் ஆகியதரப்பினர் துணையாகச் செயற்பட்டிருப்பதும் ஆய்வுகளில் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், எம்மால் கடந்த 07.07.2025 அன்றைய களவிஜயத்தின் மூலமாக திரிவைச்சகுளத்தில் பெரும்பான்மை இனத்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட பாரிய சட்டவிரோத காடழிப்பு செயற்பாடு தற்போது தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த சட்டவிரோத காடழிப்பிற்கு எதிராக எமது வலியுறுத்தலுக்கமைய உரியதரப்பினரால் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனைவிட எமது தமிழ் மக்களின் இந்த திரிவைச்சகுளம் உள்ளிட்ட பகுதிகள் மகாவலி அதிகாரசபையால் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படுகின்றமை தொடர்பில் பலதகவல்களையும் பெற்றுக்கொள்ளகூடியதாகவும் இருந்தது. எனவே அந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுத்து எமது தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களையும் காப்பாற்றுவதுதொடர்பில் எம்மால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - என்றார்.





Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
