இலங்கை மத்திய வங்கியின் சுதந்திரத்திற்கான நிபந்தனை! வெளியிடப்படும் சந்தேகம்
சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட உடன்படிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் சுதந்திரத்திற்கான நிபந்தனை தொடர்பில் சில பிரிவினர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.
எழும் கேள்வி
இதன்மூலம், மத்திய வங்கி பொதுமக்களுக்கு பதிலளிக்க அவசியமில்லையா என்ற கேள்வி பலர் மத்தியில் இருந்து வருகிறது.
எனினும் இது தவறான எண்ணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் சுதந்திரம் என்பது அதிகாரிகள், அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்று அர்த்தமல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் முழுமைச் சுதந்திரம் நடைமுறையில் உள்ள பல நாடுகளில், மத்திய வங்கியின் ஆளுநர்கள் குழுவின் உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தினால் உறுதிப்படுத்தப்படுகிறார்கள், அதேநேரத்தில் ஆளுநர்கள் சட்டமன்றக் குழுக்களால் விசாரிக்கப்படும் நடைமுறையும் உள்ளது.
சட்டமன்றக் குழுக்களின் முன் அழைக்கப்படும் ஆளுநர்கள்
உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள மத்திய வங்கியின் தலைவர் மற்றும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவின் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், அவ்வப்போது அந்தந்த சட்டமன்றக் குழுக்களின் முன் அழைக்கப்படுகின்றனர்.
இலங்கையை பொறுத்தவரையில், நாணயக் கொள்கையின் மீதான நிதிக் கொள்கை மேலாதிக்கம் மத்திய வங்கியின் சுதந்திரத்தை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது.
தற்போதைய பிரச்சினைகளுக்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
பணத்தை அச்சிடுவது மத்திய வங்கியின் தவறு அல்ல. திறைசேரி பணத்தை
அச்சடிக்குமாறு வற்புறுத்துவதால் மத்திய வங்கி பணத்தை அச்சிடுகிறது என்று ஹர்ச
தெரிவித்துள்ளார்.