சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்களுக்கான வட்டி வீதம்! வற் வரியில் தாக்கம் செலுத்தலாம்
2022 ஒக்டோபர் வரை நடைமுறையில் இருந்த சிரேஷ்ட பிரஜைகளின் வட்டியை வழங்குவதற்கான கூடுதல் பணத்திற்காக 17 வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 108 பில்லியன் ரூபாவாகும். மேலும், வருடத்திற்கு தேவைப்படும் 80000 மில்லியன் ரூபா மேலதிகத் தொகையைக் பெற்றுக்கொள்ள, தற்போதைய வற் இன் மதிப்பு 1% இனால் அதிகரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரங்கள்) ரஜித் கீர்த்தி தென்னகோன்(Rajith Keerthi Tennakoon) தெரிவித்தார்.
ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு தேவைப்படும் மேலதிக தொகை
தொடர்ந்தும் குறித்த அறிக்கையில்,
2015 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவாக ஆரம்பிக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்கான சிறப்பு வட்டி விகிதத்தின் கீழ், அதாவது வருடத்திற்கு 15% வட்டி விகிதம் வழங்கப்பட்டது.
அப்போது வங்கிகளில் நிலவிய குறைந்த வட்டி விகிதத்தில் இருந்து 15% அதிக வட்டி விகிதத்தைக் குறைக்க பணம் வழங்கியது திறைசேரி.
2015ஆம் ஆண்டு வர்த்தக வங்கிகள் மூலம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, இந்த வட்டி விகிதம் 10 இலட்சம் ரூபா வரை வழங்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 15 இலட்சமாக உயர்த்தப்பட்டது.
அதன்படி, 12 இலட்சம் சிரேஷ்ட பிரஜைகள் கணக்குகளுக்கும் இந்த வட்டி விகிதம் கிடைத்தது. 2022 ஆம் ஆண்டளவில், இந்த கூடுதல் வட்டியை செலுத்துவதற்காக திறைசேரி ஒரு காலாண்டிற்கு 20 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
இதன்படி, திறைசேரி வருடத்திற்கு 80,000 மில்லியன் ரூபாவை இதற்காக செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த செயல்முறை 2022 ஒக்டோபர் 01 முதல் நிறுத்தப்பட்டது.
50% இற்கும் அதிகமான சிரேஷ்ட பிரஜைகள் தங்கள் வட்டித் தொகையை மாதந்தோறும் பெறுகின்றனர்.
வற் அதிகரிக்கப்பட வேண்டும்
தற்போதைய நிதி நிலைமையின் படி இதற்காக வருடத்திற்கு 80,000 மில்லியன் ரூபா கூடுதல் தொகையை அரசசாங்கத்தால் தாங்க முடியாது என்பது மிகத் தெளிவாக உள்ளது. 2022 ஒக்டோபர் வரை நடைமுறையில் இருந்த சிரேஷ்ட பிரஜைகளின் வட்டியை வழங்குவதற்கான கூடுதல் பணத்திற்காக 17 வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 108 பில்லியன் ரூபாவாகும்.
வருடத்திற்கு தேவைப்படும் 80000 மில்லியன் ரூபா மேலதிகத் தொகையைக் பெற்றுக்கொள்ள, தற்போதைய VAT இன் மதிப்பு 1% இனால் அதிகரிக்கப்பட வேண்டும்.
இந்தப் பின்னணியில், சில சிரேஷ்ட பிரஜைகளுக்கு 15% வட்டி வழங்க வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டால், அதற்கான பணத்தைத் திரட்டும் வழியையும் பகிரங்கப்படுத்த வேண்டும்.
மத்திய வங்கியின் கொள்கையானது வட்டி விகிதங்களைக் குறைத்து, இலாபம் ஈட்டுவதற்கு போட்டி முறையில் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாகும்.
கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து 30% வங்கி வட்டி விகிதத்தை நெருங்கி, மக்கள் கடன் பெறுவதற்கு கூட மூலதனத்தைக் கண்டுபிடிக்க முடியாமல், நாடு வங்குரோத்தாகிப்போனதைப் பார்த்தோம். அந்த நிலைமை மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதே இந்த நேரத்தில் முக்கியமானது என்பதை வலியுறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |