தெஹிவளை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பு, தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக நேற்று(09.01.2026) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தெஹிவளை மெரின் டிரைவ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக நேற்று இரவு 8.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், ஹோட்டல் உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 57 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “சூவா சமந்த” என்பவரின் நெருங்கிய சகா என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “படோவிட்ட அசங்க” என்பவருக்கும் “சூவா சமந்த” என்பவருக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவிய தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |