பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் - மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை
நாட்டில் பணவீக்கம் இம்மாதம் மேலும் அதிகரிக்கும் எனவும் அதன் பின்னர் குறையும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை மத்திய வங்கி எதிர்பார்த்ததை விட செப்டெம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் ஆளுநர் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்.
பணவீக்கம் அதிகரித்து பின்னர் குறையும்
இம்மாதத்தில் பணவீக்கம் அதிகரித்து பின்னர் குறையும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளதாகவும், உண்மையான நிலைமை அந்த திசையில் நகர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 67.8 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும், எனினும் அந்த மாதத்தில் பணவீக்கம் 69.8 ஆக இருந்ததாகவும் அவர் கூறினார்.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இந்த மாதத்தை விட அடுத்த மாதம் பணவீக்கம் குறையும், ஆனால் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இந்த மாதத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தப் போக்கு தொடரும் என்றும், அதன்படி டிசம்பர் மாதத்திற்குள் பணவீக்கம் குறையும் என்றும், அடுத்த ஆண்டு பணவீக்கம் மேலும் குறையும் என்றும் அவர் கூறினார்.
பணவீக்கம் அதிகரித்தால் தொழில்கள் வீழ்ச்சியடையும்
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை கடுமையாக்கப்படுவதால் பணவீக்கம் குறையும் என்றும் அவர் கூறினார்.
அதிக வட்டி விகிதத்தால் தொழில் நடவடிக்கைகள் போன்றவற்றை செய்ய முடியாது என சில தரப்பினர் குற்றம் சுமத்துவதாக தெரிவித்த ஆளுநர், பணவீக்கம் அதிகரிப்பினால் தொழில் நடவடிக்கைகள் போன்றவை நடக்கவில்லையே தவிர வட்டி வீதத்தினால் அல்ல எனவும் தெரிவித்தார்.
மேலும் பணவீக்கம் அதிகரித்தால் தொழில்கள் வீழ்ச்சியடையும் என்றும் அவர் கூறினார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அதைக் குறைக்கவும் வட்டி விகிதங்கள் அதிகமாக வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
பணவீக்கம் கட்டுக்குள் வந்து குறையும் போக்கு ஏற்பட்டவுடன் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.