இலங்கையின் வரி வருமான இழப்பு குறித்து வெளியான தகவல்
அதிகாரிகளின் திறமையின்மை மற்றும் ஊழல் காரணமாக நாட்டில் வரி வருமானத்தில் பாரிய இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகிய மூன்று நிறுவனங்களில் முறையான செயற்பாடுகள் காரணமாக திறைசேரிக்கு 500 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாக நாடாளுமன்ற உயர் குழு கண்டறிந்துள்ளது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் உந்துதல் காரணமாக வருமான திரட்டல்கள் முன்னேற்றம் அடைந்துள்ளன.
வருட இறுதி எதிர்ப்பார்ப்பு
எனினும் உரிய முறை கடைப்பிடிக்கப்படாமை காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இறுதிக்குள் வருமானம் 15 சதவிகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் குறித்த உயர் குழுவின் தலைவர் மகிந்தானந்த அலுத்கமகே இது தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் சேகரிக்கப்படும் வருவாயில் 86 வீதமானது 464 வாடிக்கையாளர்களிடமிருந்தே பெறப்படுகிறதாகவும் சுமார் 2,500 பணியாளர்கள் இருந்தும் சேகரிப்புத் தளத்தை ஏன் விரிவாக்க முடியவில்லை என்பது கேள்விக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வரி ஏய்ப்பு செய்பவர்களில் முன்னணி ஆலையின் உரிமையாளர் உட்பட முக்கிய தொழிலதிபர்கள் கூட இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.