இலங்கையின் பல முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடிய இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை இலங்கையின் பல முக்கிய தலைவர்கள் சந்தித்துள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் எப்.எம். அலி சப்ரி ஆகியோர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து இன்று கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
இந்த கலந்துரையாடலில், இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாத் துறையில் விரைவான முதலீடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் தொடருந்து உள்ளிட்ட போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்க இந்திய உயர்ஸ்தானிகர் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதலாவது செயலாளர் எல்டோஸ் மேத்யூ ஆகியோர் கலந்துகொண்டனர்.