இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவாக செயற்படுவதாக இந்தியா உறுதி
இலங்கைக்கு சகல வழிகளிலும் தொடர்ந்து ஆதரவாக செயற்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்காக, இலங்கையின் முக்கிய பொருளாதார துறைகளில் நீண்டகால முதலீடுகளை இந்தியா ஊக்குவிக்கும் என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு இனி எந்த நிதியுதவியும் வழங்கப்படமாட்டாது என்ற செய்திகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் பேச்சாளர் ஒருவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள்
இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை நிவர்த்தி செய்வதற்காக இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு இருதரப்பு உதவிகளை வழங்கியுள்ளது.
அத்துடன் இலங்கையின் தற்போதைய பொருளாதார சிக்கல்களில் இருந்து விரைவாக மீட்சிப்பெற இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளிகளுக்கும் இந்தியா பரிந்துரைத்துள்ளது என்று உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்களுக்கான உயர்கல்வி
இதேவேளை இலங்கையர்களும் உயர்கல்வி மற்றும் திறன் பயிற்சிக்கான புலமைப்பரிசில்களை முதன்மை இந்திய நிறுவனங்களில் இருந்து தொடர்ந்து பெற்று வருகின்றனர்.
அத்துடன் இலங்கையுடனான நெருக்கமான மற்றும் நீண்டகால ஒத்துழைப்பின் இந்த
அம்சங்களும் இலங்கையின் தற்போதைய பொருளாதார சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்கான
முயற்சிகளுக்கு பங்களிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.