ஊழலற்ற முறையில் செயற்பட வேண்டும்.. இம்ரான் எம்பி
உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்கள் ஊழலற்ற சபையை உருவாக்கி எமது கட்சியின் ஒழுக்கத்துக்கு மகிமை சேர்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நேற்று (14) நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தலைமையில் சத்திய பிரமாண நிகழ்வை மேற்கொண்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்ட 36 உறுப்பினர்கள் இன்று சட்டத்தரணி எஸ். சஸ்னி அஹமட் முன்னிலையில் சத்தியபிரமாணத்தை மேற்கொண்டனர்.
பிரதேச சபை - மாநகர சபை
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச சபைகளிலும், கிண்ணியா நகர சபை மற்றும் திருகோணமலை மாநகர சபையையும் சேர்ந்த 36 உறுப்பினர்கள் இன்று சத்திய பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு கிண்ணியா நகர சபை முன்னாள் தவிசாளர் எஸ் எச் எம். நளிம், சேருவிலை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ரணசிங்க பண்டார உட்பட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த தேர்தல் முறையானது சிக்கலான அமைப்பை கொண்டது. வெற்றி பெற்றவர்களை ஆட்சி பீடத்தில் ஏற்ற முடியவில்லை எதிர்க்கட்சி உள்ளவர்கள் ஆட்சி அமைக்க முயற்சி செய்கின்றனர்.
இவ்வாறான ஒரு தேர்தல் முறையை அரசாங்கம் இல்லாமல் செய்து உள்ளூராட்சி தேர்தலை நடத்தி இருக்க முடியும். இருந்த போதும் அதனை செய்யாது தேர்தலை நடத்தியதன் மூலம் இவ்வாறான நிகழ்வு நடைபெற்று வருகின்றன.
மேலும், உள்ளூராட்சி சபையில் கடந்த காலம் ஊழல் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன. எனவே சிறந்த சபையாக நடத்துவதற்கு ஒரு எடுத்துக்காட்டாக எமது ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என இம்ரான் எம்பி குறிப்பிட்டுள்ளார்.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
