அச்சுறுத்தும் கொரோனா தொற்று! - சுவிஸில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு
- சுவிசிற்குள் நுழைவோர் 04.12.21 சனிக்கிழமை முதல் தனிமைப்படுத்த தேவையில்லை, தொடர்வினைப்பரிசோதனை (பி.சீ.ஆர்) காண்பிக்க வேண்டும்.
- எல்லை நாடுகளில் இருந்து சுவிசிற்குள் பணிசெய்வோருக்கு இவ்விதி பொருந்தாது.
- நடன மற்றும் பொழுதுபோக்கு விடுதிகள் 2. ஜி (தடுப்பூசி இட்டவர்கள், நோயில் குணமடைந்தோர் நுழைய அனுமதி) விதிக்கு அமைய திங்கள் முதல் இயங்கலாம்.
- உள்ளரங்குகளில் தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்வுகளில் அனைவரும் தடுப்பூசி சான்று காட்டவேண்டும்.
- வாய்ப்பு உள்ளோர் இல்லங்களில் இருந்து பணிசெய்ய முன்மொழியப்படுகின்றது.
- நுண்ணுயிர் எதிர்ப்பி (அன்ரிகேன்) சோதனைத் சான்று 48 மணிநேரத்திற்கு அல்ல 24 மணிநேரத்திற்கே செல்லுபடியாகும்.
கடந்த 24 மணிநேரத்திற்குள் சுவிட்ஸர்லாந்தில் 9951 புதிய தொற்றுக்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், 29 இறப்புக்கள் நேர்ந்துள்ளது. 118 பேர் மகுடநுண்ணித்தொற்றின் பெருந்தாக்கத்தால் மருத்துவமனைகளில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முந்தைய வெள்ளியுடன் ஒப்பிட்டால் 8032 புதிய தொற்றுக்களும், 12 இறப்புக்களும், 106 நோயாளர்கள் மருத்துமனையில் சேர்ப்பிக்கப்பட்டதும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
“தற்போதைய சூழல் துயராந்த கடுமையாக உள்ளது, இதனை நாம் விரும்பவில்லை, ஆனால் உண்மை நடைமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும்“ எனும் வாசகத்துடன் சுவிசின் நலவாழ்வு அமைச்சர் அலான் பெர்சே ஊடக சந்திப்பினை ஆரம்பித்து வைத்தார்.
இச்சூழலில் சுவிட்ஸர்லாந்தில் நடுவனரசு இன்று ஒன்றுகூடி தமது புதிய நடவடிக்கையினை அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 6ம் திகதி முதல் ஜனவரி 24ம் திகதி வரை இப்புதிய நடைமுறை செல்லுபடியாகும்.
முகவுறை அணிதல், தடுப்பூசி சான்று எனும் முறைகள் விரிவாக்கப்படுகின்றது. பொது நிகழ்வுகளில் தடுப்பூசி இட்டவர்கள் மற்றும் நோயில் இருந்து குணம் அடைந்தவர்கள் மட்டுமே பங்கெடுக்கலாம் எனும் விதியும் அறிவிக்கப்படுகின்றது.
தனியார் நிகழ்வுகள்
ஆகக்கூடியது 10 ஆட்கள் மட்டுமே தனிப்பட்ட விழாக்களில் பங்கெடுத்துக்கொள்ளலாம். இது முன்மொழிவாக அறிவிக்கப்படுகின்றது. இவ்விதி மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது.
தனிமைப்படுத்தல் நீக்கப்படுகின்றது
இதுவரைக்கும் சுவிட்ஸர்லாந்தில் அரசு நோய்தொற்று அதிமுள்ள நாடுகளைப் பட்டியலிட்டு, அந்நாட்டில் இருந்து சுவிசிற்குள் மீளவருகை அளிப்போர் தம்மைத் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் எனும் விதி இருந்தது.
இத் தனிமைப்படுத்தல் விதியினை இன்று சுவிட்ஸர்லாந்தில் நடுவனரசு நீக்கி உள்ளது. இதன் படி அனைத்து நாடுகளில் இருந்து சுவிசிற்குள் உள்நுழைவோர் தொடர்வினைப்பரிசோதனை (பி.சீ.ஆர்) சான்றினைக்காட்டிக்கொண்டே சுவிசிற்குள் நுழைய முடியும்.
இது தென்னாப்பிரிக்காவிற்கும் பொருந்தும். இவ்விதி 04.12.2021 சனிக்கிழமைமுதல் நடைமுறைக்கு வருகின்றது. தடுப்பூசி இட்டுக்கொண்டாலும், மகுடநுண்ணித்தொற்றுக்கு உள்ளாகி குணம் அடைந்திருந்தாலும் சுவிசிற்குள் நாடு திரும்புகையில் நோய்த்தொற்றுப் பரிசோதனை செய்துகொள்ளப் பணிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பரிசோதனை முறை நடைமுறைக்கு வருவதால் தனிமைப்படுத்தல் தேவையில்லை என்று சுவிஸ் அறிவித்துள்ளது. நாட்டிற்குள் நுழையும்போதும், 4வது நாளும் 7வது நாளும் தொடர்வினைப் பரிசோதனையினை (பி.சீ. ஆர்.) பயணிகள் செய்யவேண்டும்.
இதற்கான செலவினை பயணிகளே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறான நோய்த்தொற்றுத் தொடர்பரிசோதனைகள் கேடுநுண்ணி பரவலைக் கட்டுப்படுத்தும் என துறைசார் அறிஞர் மதியுரையினை சுவிற்சர்லாந்து நடுவனரசு நடைமுறைப்படுத்துகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேராத 3ம் நாடுகளைச் சேர்ந்தோர் உரிய தடுப்பூசி இட்டுக்கொள்ளாத சுற்றுலாப்பயணிகள் சுவிசிற்குள் நுழையத் தடைவிதிக்கப்படுகின்றது. தங்குகை வதிவிட அனுமதி உள்ளவர்களுக்கு இத்தடை கிடையாது.
மீண்டும் வேண்டுகை
புதிதாக உருமாறி மிக வேகமாக பரவிக்கொள்ளும் ஒமிக்கிறோம் வகை நோய்த்தொற்றினையும் கட்டுக்குள் வைத்திருக்கவும், பெருந்தீங்கு விளைவிக்கும் இத்தொற்றில் இருந்து மக்கள் தம்மைக் காத்துக்கொள்ளவும், நோய்தொற்று ஏற்பட்டு அதனால் ஏற்படும் கேடான பக்கவிளைவுகளை தவிப்பதற்கும் பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியினை இட்டுக்கொள்ள வேண்டும் எனும் வேண்டுகை சுவிட்ஸர்லாந்தில் அரசின் பெயரால் இன்றைய சந்திப்பில் வேண்டிக் கேட்கப்பட்டது.
தடுப்பூசி இட்டுக்கொண்டவர்கள் அல்லது முன்னர் நோய்த்தொற்றில் இருந்து தேறியவர்களுக்கு இந்நோய் வந்தால் ஏற்படும் பாதிப்பு புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகுபவர்களைவிடக் குறைவானதாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் அலான் பெர்சே குறிப்பிட்டார்.
வீட்டில் இருந்தபடி பணிசெய்ய அரசாணைபிறப்பிக்கப்படவில்லை
திங்கள் முதல் வாய்ப்புள்ளோர் வீடுகளில் இருந்து பணிசெய்ய கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். இது வெறும் முன்மொழிவாக மட்டும் சுவிஸ் அரசால் வேண்டுகை விடுக்கப்படுகின்றது.
கட்டாயப் பணிப்பாக வீட்டில் இருந்தபடி பணிசெய்ய ஆணைபிறப்பிக்கப்படவில்லை. பணியகங்களில் பணிசெய்வோர் உள்ளரங்குகளில் எந் நேரமும் முகவுறை அணிந்துகொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
தடுப்பூசி இட்டுக்கொள்ளாதவர்களுக்கும் அல்லது அனைவருக்கும் வீடுகளில் இருந்து பணிசெய்ய அரசாணை வழங்கும்படி துறைசார் நிபுணர் குழு விடுக்கப்பட்ட வேண்டுகையினை சுவிஸ் அரசு ஏற்கவில்லை.
தொடர்வினைப் பரிசோதனை (பி.சீ.ஆர்)
பி. சீ. ஆர். இதன் செல்லுபடியாகும் நேரம் 72 மணிநேரம் ஆகும். நுண்ணுயிர் எதிர்ப்பி (அன்ரிக்கேன்) விரைவுப் பரிசோதனைச்சான்றின் செல்லுபடியாகும் காலம் 24 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
12 வயதிற்கு மேற்பட்டோர்கள் மட்டுமே சுவிசிற்குள் தடுப்பூசி இட்டுக்கொண்டுடிருப்பதால் பிற கட்டுப்பாடுகளை சுவிஸ் அரசு விதிக்கவில்லை என விளக்கப்பட்டது.
26 மாநிலங்களில் 17 மாநிலங்கள் பாடசாலைகளில் தொடர்ச்சியாக மகுடநுண்ணித் தொற்றுப்பரிசோதனை செய்யப்படும் எனும் மாநிலங்களின் கடந்த செவ்வாய் முன்மொழிந்த மதியுரையை நடுவனரசு ஏற்கவில்லை.
விரும்பும் மாநிலங்கள் தம் விருப்பப்படி இவ்வாறு பரிசோதனை செய்துகொள்ளலாம், ஆனால் இதனை நடுவனரசின் ஆணையாகப் பிறப்பிக்கவில்லை என விளக்கப்பட்டது.
நடுவனரசு அறிவித்திருக்கும் நடவடிக்கை தமது மாநிலத்தில் நிலவும் நலவாழ்வுச்சூழலை மேம்படுத்த போதுமானதாக இல்லை என மாநில அரசுகள் எண்ணின் அவை இவ்விதிகளை மேலும் கடுமையாக இறுக்க நடுவனரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வெளியரங்குகளில் தடுப்பூசிச்சான்றுடன் ஆகக்கூடியது 300 ஆட்கள் ஒன்றுகூடலாம்
இதுவரை வெளியரங்குகளில் 1000 ஆட்கள் ஒன்றுகூடலாம் எனு உள்ள விதி புதிதாக 300 ஆட்கள் வரைக்கும் என வரையறுக்கப்படவுள்ளது. நிகழ்வுகளில் தடுப்பூசி இட்டுக்கொண்டவர்கள் மட்டும் பங்கெடுக்கலாம் எனும் அறிவிப்பினை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறிவிக்க சுவிஸ் அரசு ஒப்புதல் அளிக்கின்றது.
இதன் பொருள் மகுடநுண்ணி நோய்த்தொற்று இல்லை எனப் பரிசோதனை சான்று பெற்றிருந்தாலும் பெருநிகழ்வுகளில் தடுப்பூசி இட்டுக்கொள்ளாமல் அல்லது நோயில் இருந்து குணம் அடைந்து தேறிய சான்று இல்லாமல் கலந்துகொள்ள முடியாது.
இவ்வாறு தடுப்பூசி சான்று மற்றும் நோயில் இருந்து குணம் அடைந்த சான்றுடன் நடைபெறும் நிகழ்வுகளில் முகவுறை அணியவேண்டும் இருக்கையில் இருக்க வேண்டும் எனும் விதி ஒழுகத் தேவையில்லை.
நடனவிடுதிகள் மற்றும் குழாம் விடுதிகளின் வேண்டுகோளிற்கு அமைய சுவிஸ் அரசு இந்த விலக்கினை அறிவித்துள்ளது. இவ்விதி 13. 12. 2021 முதல் நடைமுறைக்கு வரும். அதுவரை விடுதிகள் தம்மைத்தயார் செய்துகொள்ள கால எல்லை வழங்கப்படுகின்றது.
முகவுறைக் கட்டாயம்
நோய்ப்பரிசோதனை செய்துகொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி சான்று உள்ளவர்கள் பங்கெடுக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் கட்டாயம் முகவுறை அணிய வேண்டும்.
குடும்ப விழாக்கள் மற்றும் சிறிய குழுவில் இசைப்பயிற்சி செய்வோருக்கு, உணவகங்களில் மேசையில் இருந்து உண்போர், சில விளையாட்டுப்பயிற்சிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும்.
தொகுப்பு: சிவமகிழி