வங்காள விரிகுடாவில் மாறும் காலநிலை: சூறாவளி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இன்று அதிகாலை 02.30 மணிக்கு இறுதியாக செய்யப்பட்ட ஆய்வின்படி மாண்டெஸ் சூறாவளி தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை முன்னாள் வானிலை அவதானிப்பு நிலைய அதிகாரி சூரியகுமாரன் வெளியிட்டுள்ளார்.
இந்த சூறாவளி கடந்த 03 மணித்தியாலங்களில் மணிக்கு 08km வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தற்போது தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் (9.3N, 84.4E)மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம்
இந்த சூறாவளியின் மையப் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் வேகமானது 60km/h-70km/h வரை வீசிக் கொண்டிருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எதிர்வரும் 09ஆம் திகதி நள்ளிரவு வேளையில் 65km/h - 75km/h வேகத்தில் வீசும் காற்றுடன் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரி ஹோத்தாவிற்கும் இடையே ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு கிழக்கே 370கி.மீ) ஆழமான காற்றழுத்த தாழமுக்கம் 'மாண்டூஸ்' சூறாவளியாக குவிந்து வலுவடைந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தொடர்பில் இன்று எமது பிராந்திய செய்தியாளர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்வதுடன் மாவட்டத்தின் சில இடங்களில் மழைவீழ்ச்சியுடன் அதிகளவான காற்றும் பனிமூட்டமும் காணப்படுகின்றது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம்
அம்பாறை மாவட்டத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதனால் பாரிய மரங்கள் பழயை கட்டடங்கள் இடிந்து விழும் அபாயங்கள் ஏற்படும்.
இது தவிர 'மாண்டூஸ்' சூறாவளியின் தாக்கத்தின் கீழ் அம்பாறை மாவட்ட கடற்கரையின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் மிக பலத்த காற்று மற்றும் பலத்த மழையுடன் மிகவும் கரடுமுரடான அலைகள் உயரமாக எழுகின்றன.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சுமார் 2.5 மீட்டர் முதல் 3.5 மீட்டர் வரையான அலைகள் வீசக்கூடும்.
எனவே மேற்கூறிய ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரும்வரை கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என கேட்டக்கொள்கின்றேன் என கூறியுள்ளார்.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் உயர்வாகவும் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும்.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால கணிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
செய்தி- பாறுக் ஷிஹான்