கொன்சியூலர் அலுவலகங்களில் சான்றளிப்பு சேவைகள் பாதிப்பு: கோபமடைந்த மக்கள்
கொன்சியூலர் விவகாரப் பிரிவில் செயற்படுத்தப்படுகின்ற மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் ஏற்பட்டுள்ள சீர்குலைவின் காரணமாக, கடந்த வாரத்தில் சான்றளிப்பு சேவைகள் பாதிக்கப்பட்டு, சேவைகளை வழங்குவதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் உள்ள கிளை சான்றளிப்பு முறைமையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்காக அமைச்சு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளைச் சீர் செய்யும் முகமாக அமைச்சின் தொழில்நுட்பக் குழு செயற்பட்டு வருவதாக அதில் குறிப்பிட்டுள்ளது.
எனவே இந்த சூழ்நிலையில், இன்று முதல் நாளாந்தம் வருகை தரும் 150 வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் சேவைகளை வழங்க முடியுமென அமைச்சு கூறியுள்ளது.
இந்தப் பிரச்சினைகள் சீர் செய்யப்பட்டவுடன் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் சான்றளிப்புக்கான சாதாரண சேவைகள் மீள ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கணினிப் பராமரிப்பு சார்ந்த பணிகள் நிறைவடைந்தவுடன், புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுமென, இலங்கை வெளிவிவகார அமைச்சின் விசேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொன்சியுலர் அலுவலகத்தின் அதிகாரிகள் அவர்களுடைய கடைமையைச் சரியாகச் செய்யாததால் நீண்ட வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாக வெளிநாடு செல்லும் நோக்கில் உள்ள மக்கள் கோபத்துடன் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோருக்கு மாத்திரமே சேவையைப் பெற்றுக்கொடுக்க முடியும் என கொன்சியூலர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனால் இங்கு தூரப் பிரதேசங்களிலிருந்து வருகை தரும் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
