இலங்கைக்கான அடுத்த தவணை நிதியை சர்வதேச நாணய நிதியம் திரும்பப் பெறலாமென தகவல்
தனியார் கடன் வழங்குநர்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுக்களை நடத்தி, அரசாங்கம் நல்ல நம்பிக்கையைக் காட்டத் தவறினால், சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் அடுத்த தவணை நிதியைத் திரும்பப் பெறக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரிவான பேச்சுவார்த்தை
சீனா உட்பட இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் அரசாங்கம் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் அதேவேளையில், தனியார் கடன் வழங்குநர்களுடன் இதேபோன்ற கலந்துரையாடல்கள் நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இலங்கைக்கான தனியார் கடன் வழங்குபவர்களின் அளவு மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் அல்லது சீனாவின் பணத்தை மட்டும் இலங்கை நம்பியிருக்க முடியாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, அடுத்த மீளாய்வுக்கு முன்னதாக, பத்திரதாரர்கள் மற்றும் சீன அபிவிருத்தி வங்கி உட்பட அதன் வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ளும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் இலங்கை அரசாங்கம், தம்முடன் பேச்சுவார்த்தைகளில் தீவிரத்தை காட்டாதுபோனால், சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மதிப்பாய்வு மற்றும் இலங்கைக்கான தவணையைத் தடுக்க தனியார் கடன் வழங்குபவர் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள் என்றும் ஆங்கில செய்தித்தாள் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னைய ஆட்சியை விட சிறப்பாக செயற்படுவார் என்ற நம்பிக்கையில் அனைவரும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.
நிறைய நம்பிக்கை இருந்தது, ஆனால் இப்போது அது மிகவும் ஏமாற்றமாக மாறுகிறது என்றும் தனியார் கடன் வழங்குநர் தரப்பை கோடிட்டு, செய்தித்தாள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கடன் வழங்குனர்கள் சந்தேகம்
இதேவேளை உள்நாட்டு அரசியல் மற்றும் வரவிருக்கும் தேர்தல்கள் காரணமாக தனியார் கடனாளிகளை கையாள்வதில் இலங்கை மிகவும் மெதுவான வேகத்தில் நகர்கிறது என்று தனியார் கடன் வழங்குநர்கள் சந்தேகிக்கின்றனர்.
விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் தனியார் கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தம் செய்ய ஜனாதிபதி விரும்பவில்லை என்றும் தனியார் கடன் வழங்குனர் தரப்புக்கள் சந்தேகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, அரசாங்க ஆலோசகர்கள் பிணைமுறி வைத்திருப்பவர்களின் ஆலோசகர்களுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
பத்திரம் வைத்திருப்பவர்கள் மற்றும் வணிகக் கடன் வழங்குபவர்கள் உட்பட அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் நன்மை பயக்கும் கடன் தீர்வை விரைவில் முடிக்க இலங்கை விரும்புகிறது என்று அவர் கூறினார்.
கடன் பத்திரம் வைத்திருப்பவர்கள் தமக்கு மிகவும் முக்கியமானவர்கள் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |