இலங்கை தொடர்பில் சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தலின் தாக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பணியாளருக்கு ஆறு வேலை நாட்களை இழக்க செய்கின்றது.
இதனால், இலங்கையில் செயற்படும் ஒன்பது நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 1.7 மில்லியன் டொலர்கள் நட்டமேற்படுவதாக சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனமான ஐ.எப்.சியின் புதிய அறிக்கை தெரிவிக்கின்றது.
ஐ.எப்.சிஅவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பங்களிப்புடன் மேற்கொண்ட ஆய்வில், ஐந்தில் மூன்று பேர் பணியிட வன்முறை அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.
பணி பாதுகாப்பின்மை
ஐந்து பேரில் ஒருவர் பணி பாதுகாப்பின்மையை உணர்கின்றார்கள். ஒன்பது நிறுவனங்களின் பணியாளர்கள் பாலினம் மற்றும் வயது பிரிவுகளில் கொடுமைப்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல் அல்லது இணைய வன்முறையால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தல் உலகளாவிய ரீதியில் பொதுவானது. இது அனைத்து நாடுகளையும், தொழில்களையும் பாதிக்கின்றது.
எனவே வணிகங்கள் தங்கள் பணிகளையும், இலக்குகளையும் வழங்குவதற்கு, பணியிட கலாசாரம் அவசியம் என்று இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான ஐ.எப்.சியின் பதில் மேலாளர் விக்டர் அன்டனிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார சூழலை கருத்திற்கொண்டு, இலங்கை வர்த்தகர்கள் அவற்றை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இதற்கிடையில் பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை முன்னெச்சரிக்கையுடன் நிவர்த்தி செய்வதற்கு, இலங்கை வர்த்தகங்கள் நல்ல நடைமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு அறிக்கை பரிந்துரைக்கின்றது.
உற்பத்தி, வங்கி,நிதி மற்றும் சுற்றுலா உட்பட பல்வேறு தொழில்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது இலங்கை நிறுவனங்களைச் சேர்ந்த 1,600 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த அறிக்கைக்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை அனைத்து விதமான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து விடுபட்ட
மரியாதைக்குரிய பணியிடங்களை உருவாக்குவது, உள்ளடக்கிய மற்றும் நிலையான
வளர்ச்சியை அடைய இந்த பரிந்துரைகள் இலங்கைக்கு இன்றியமையாததாகும் என்று
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.