ஒரே நாளில் 20 இலக்குகளை தரைமட்டமாக்கிய IDF.. தொடரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்
இன்று தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கு பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் மிக மோசமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
லெபனானில் நடைமுறையில் உள்ள போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று ஒரே நாளில் ஹிஸ்புல்லாக்களின் சுமார் 20 இலக்குகளை குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பாரிய வான்வழித் தாக்குதல்கள்
தெற்கு லெபனானில் இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்களை நடத்த பயன்படுத்தப்பட்ட கட்டிடங்கள் மற்றும் ஆயுதக் களஞ்சியசாலைகள் இதன்போது தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஹிஸ்புல்லாக்களின் ஆயுத உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையத்தை குறிவைத்து இஸ்ரேல் பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
முன்னர் இஸ்ரேலிய தாக்குதல்களால் சேதமடைந்த இந்த இடத்தை, மீண்டும் புனரமைத்து ஆயுதங்களைச் சேகரிக்க ஹிஸ்புல்லாக்கள் முயற்சி செய்ததை அவதானித்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக IDF தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்தின் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த பாரிய வான்வழித் தாக்குதல்கள் லெபனான் எல்லைப்பகுதியில் மீண்டுமொரு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளன.