19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இலங்கை குழாமில் ஷாருஜன் சண்முகநாதன்
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடராருக்கான இலங்கை குழாமில் ஷாருஜன் சண்முகநாதன் இடம்பிடித்துள்ளார்.
குறித்த தொடரானது தென்னாப்பிரிக்காவில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில் குறித்த தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குழாம்
இதன்படி, சினெத் ஜெயவர்தன தலைமையிலான குறித்த குழாமில் புலிண்டு பெரேரா, ஹிருன் கபுருபண்டார, ரவிஜான் நெத்சர, ருசன்ட கமகே, ஷாருஜன் சண்முகநாதன், டினுர கலுபஹன, மல்சா திருப்பதி, விஷ்வா லஹிரு, கருக சக்கெத், டுவின்டு ரத்நாயக்க, ருவிஷான் பெரேரா, சுபுன் வடுகே, விஹாஸ் தெவ்மிக மற்றும் விஷேன் ஹலம்பகே ஆகிய வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த குழாமிற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அனுமதி வழங்கியுள்ளார்.
கொழும்பு - கொட்டாஞ்சேனை , புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி மாணவனான சாருஜன் சண்முகநாதன் பாடசாலை மட்ட கிரிக்கெட் தொடர்களில் வெளிப்படுத்திய ஆற்றல் செயல்பாடுகள் காரணமாக 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் முதல் தடவையாக கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவை ஆதர்ஷ நாயகனாக கொண்டுள்ள சாருஜன், அவரைப் போலவே விக்கெட் காப்பு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டையும் திறம்பட செய்து 2022 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கான விருது வழங்கும்விழாவில் சிறந்த விக்கட் காப்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.
மேலும், 2015 ஆம் ஆண்டு பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், முன்னாள் கிரிக்கெட் வீரர் டொனி கிரேவினால் ''லிட்டில் சங்கா'' என சாருஜன் சண்முகநாதன் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.