உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பேன் - சஜித்
தாம் ஆட்சிக்கு வந்தவுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய அனைவருக்கும் தூக்குத்தண்டனையை பெற்றுக்கொடுப்பேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் எதிர்கட்சியாக இருந்த வேளையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் இருந்து இயங்கியவர்களை தண்டிப்பதாக கூறினர்.
ஆனால் இன்று ஆட்சிக்கு வந்தவுடன் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் எவரும் அடையாளம் காணப்பட்டதாக தெரியவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை முற்றுமுழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒன்றாகவே வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு சவாலென நினைக்கும் நபர்களை இலக்குவைத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை தெளிவாக தெரிகின்றது.
ஆனால் இந்த தாக்குதலுடன் நேரடியான தொடர்புகளை கொண்டுள்ளவர்கள், யார் காரணம் என்ற அனைத்து உண்மைகளும் மறைக்கப்பட்டுள்ளன. எனவே அரசாங்கம் மக்களை ஏமாற்றியது மட்டுமல்லாது இந்த தாக்குதலை அரசாங்கம் மூடி மறைக்க நடவடிக்கை எடுப்பதாக சந்தேகம் எழுகின்றது.
குற்றவாளிகளுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்புகள் இருக்குமா என்ற கேள்வியும் எழுகின்றது. ஆட்சியாளர்களுக்கு தேவையான அதிகார பலம் கிடைத்துவிட்டது, 20 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
மக்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதை அவர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது குடும்ப அரசியலை மீண்டும் முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
எனவே இதற்கு மத்தியில் அவர்களுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயங்கள் முக்கியமான ஒன்றல்ல. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மைகளை மூடி மறைக்கவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என்பதை இப்போதாவது மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் இன்னமும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உத்தியோகபூர்வமாக கூடுவதில்லை.
எனவே நாம் ஆட்சிக்கு வந்ததும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சட்டபூர்வமாக அங்கீகரித்து அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, தாக்குதலின் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரி யார் என்பதையும், அதற்கு இடமளித்த அரசியல் தலைமைகள் யார் என்பதையும் கண்டறிந்து அவர்களுக்கு மரண தண்டனையை பெற்றுக்கொடுப்போம் என வாக்குறுதியளிக்கிறேன் என்றார்.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
