லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் தம்பதியினர் படுகாயம்
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கம்பகொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவன் மற்றும் மனைவி படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து நேற்றிரவு (07) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து வருகைதந்த லொறி வீதியோரத்தில் பாக் லைட் போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதே நேரம், அதே வழியாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் திருகோணமலை- தேவ நகர் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட கே. ரவிச்சந்திரன் (38 வயது) மற்றும் அவரது மனைவியான ஆர். பிரியதர்ஷினி (37வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த இருவரும் விபத்துக்குள்ளான நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில், மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


