போருக்குப் பிந்தைய தமிழ் அரசியல் பிளவுகள் நீதி தேடும் முயற்சிகளை மந்தமாக்குகின்றன: மனித உரிமை சட்டத்தரணி வசந்தராஜ்
போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் இலங்கையின் தமிழ் அரசியல் (Sri Lankan Tamil Politics) தலைமைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஆழமான அரசியல் பிளவுகள் (deep political divisions), மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தேடும் முயற்சிகளை கடுமையாக பாதித்து வருவதாக, முன்னாள் மனித உரிமை அதிகாரியும் சட்டத்தரணியுமான R.L.வசந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இத்தாலி பாவியா பல்கலைக்கழகத்தில் (University of Pavia) World Politics and International Relations துறையில் முதுகலை பட்டத்திற்கான ஆய்வினை சமர்ப்பித்து வெளியேறியதையடுத்து, நேற்றைய தினம் (04.01.2025) ஊடகங்களுக்கு வழங்கிய செய்தி குறிப்பிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நோக்கில் வலுவான அரசியல் ஆதரவு தளத்தை (political support platform) உருவாக்க வேண்டிய கரிசனை தமிழ் அரசியல் தலைமைகளிடையே போதுமான அளவில் வளரவில்லை என்றும், அதனை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைத் தமிழ் அரசியல் தலைமை தோல்வி
போர் முடிந்த பின்பு, சர்வதேச அரசியல் சூழல் (international political context) மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களை உரிய முறையில் ஒருங்கிணைத்து, நீதி கோரிக்கைகளை சர்வதேச அரங்கில் ஒரே குரலாக (unified voice) முன்வைப்பதில் இலங்கைத் தமிழ் அரசியல் தலைமை தோல்வியடைந்துள்ளதாக அவர் விமர்சித்தார்.
குறிப்பாக, சர்வதேச நீதிக்கான முயற்சிகளில் (international justice efforts) ஒற்றுமையான செயல்திட்டம் (unified strategy) இல்லாததன் காரணமாக, இந்த கோரிக்கைகள் பலவீனமாக வெளிப்பட்டன. மேலும், நீதி மீள்கட்டமைப்பு (reconstruction), இழப்பீடு (reparation) மற்றும் சமூக நல்லிணக்கம் (social reconciliation) ஆகிய துறைகளில் அரசியல் ரீதியான போதுமான பங்கேற்பும் பங்களிப்பும் வழங்கப்படாததால், ஐக்கிய நாடுகள் சபை மூலம் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை கண்காணிப்பு (human rights monitoring) உள்ளிட்ட நடவடிக்கைகள் எதிர்பார்த்த அளவில் முன்னேறவில்லை.

போர் முடிந்த பின்னர், தனிப்பட்ட கட்சி நலங்களும் (party interests) அரசியல் இலாபங்களும் (political gains) முன்னிலைப்படுத்தப்பட்டதன் விளைவாக, வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மற்றும் துயரத்திற்கு உள்ளானவர்களின் குரல் (voices of victims) போதுமான முறையில் வெளிப்படவில்லை என்றும், இதனால் நீதி கோரிக்கைகள் (justice claims) மற்றும் மனித உரிமை மீட்பு முயற்சிகளில் (human rights advocacy) அரசியல் நலன்கள் மேலோங்கிய நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலை, காணாமல் ஆக்கப்பட்டோர் (disappeared persons), நீதிக்கு முரனாக கொலை செய்யப்பட்டோர் மற்றும் பிற பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குறைந்தபட்ச நீதிக்கான எதிர்பார்ப்புகளை (minimum justice expectations) கடுமையாக பாதிப்பதோடு, அவர்கள் தங்களை இரண்டாவது முறையாக தண்டிக்கப்படுவதாக (secondary victimization) உணரும் சூழலையும் உருவாக்கியுள்ளது என்றார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரும் முயற்சி
அதேபோன்று, தமிழ் அரசியல் பிரிவுகளுக்கும், வடக்கு - கிழக்கு பகுதிகளில் நீதி (justice), உண்மை கண்டறிதல் (truth-seeking) மற்றும் சமூக நல்லிணக்கம் (social reconciliation) தொடர்பில் செயற்படும் சிவில் சமூக அமைப்புகளுக்கும் (civil society organizations) இடையே ஒருங்கிணைவு இல்லாமையும் கருத்து வேறுபாடுகளும் காணப்படுவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரும் முயற்சிகள் (justice efforts) எதிர்பார்த்த அளவில் முன்னேறவில்லை.
உள்ளூர் மக்களிடையே மட்டுமல்லாது, புலம்பெயர் தமிழ் சமூகத்திலும் (diaspora Tamil community) தமிழ் அரசியல் பிரிவுகள் சில நீதி நோக்கிய நகர்வுகளில் குறிப்பிடத்தக்க பிளவுகளை (significant divisions) உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குரல் கொடுப்போரின் ஆர்வமும் (participation) பங்கேற்பும் குறைந்து வருகின்றது.

சமகாலத்தில், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் (represent minority victims) தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையிலான பருவக்கால அரசியல் இணைவுகள் (temporary political alliances) மற்றும் தனிப்பட்ட அரசியல் தலைவர்களுக்கிடையே காணப்படும் முரண்பாடுகள் (conflicts) ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அதிக முக்கியத்துவம் பெறுவதால், மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்களின் (human rights victims) துன்பங்களும் கவலைகளும் சமூகத்தில் ஓரங்கட்டப்படுகின்றன (marginalized) என்றும் அவர் கூறினார்.
இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர்கள் நீதியின்மீது தங்களுடைய நம்பிக்கையை மெதுவாக இழந்து வருவதோடு (loss of trust in justice), பொறுப்புக்கூறல் (accountability) மற்றும் நீதிக்கான முயற்சிகளில் அரசியல் ரீதியான ஆதரவை வழங்குவதில் தயக்கம் உருவாகுகிறது என்றும், சிலர் நீதி மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளில் தங்களின் பங்கேற்பை குறைக்கும் நிலைக்கு (reduced participation) தள்ளப்படுகின்றனர்.
குறையும் நம்பிக்கை
மேலும், தமிழ் அரசியல் தலைமைகளுக்கிடையிலான பொது வெளி முரண்பாடுகள் (public disagreements) மற்றும் உணர்ச்சி பூர்வமான அரசியல் செயல்பாடுகள் (emotional political acts), போர்களால் பாதிக்கப்பட்ட சமூகத்தில் அதீத விரக்தி மற்றும் வெறுப்புணர்வை (anger and resentment) அதிகரித்துள்ளன என்றும், இதன் விளைவாக நீதி தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்குள்ள நம்பிக்கைகள் (trust in justice) தொடர்ந்து குறைவடைந்து வருகின்றன.

எனவே, தனிப்பட்ட கட்சி மற்றும் நபர் நலன் களைத் தாண்டி (beyond party and personal interests), பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட ஒற்றுமையான அரசியல் அணுகுமுறை (unified political approach) அவசியம் என வலியுறுத்திய அவர், பொது வெளி முரண்பாடுகள் மற்றும் உணர்ச்சி பூர்வ அரசியல் செயல்பாடுகளைத் தவிர்த்து, நீதி உண்மை கண்டறிதல் இழப்பீடு மற்றும் நல்லிணக்கம் ஆகிய துறைகளில் உள்ளூர் மற்றும் புலம்பெயர் சமூகங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.
அத்தகைய ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமே பாதிக்கப்பட்ட சமூகத்தின் நம்பிக்கையை மீட்டெடுத்து சர்வதேச அளவில் வலுவான ஒரே குரலை (strong unified international voice) உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டத்தரணி R.L.வசந்தராஜ் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் சுமார் 14 ஆண்டுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனித உரிமை அதிகரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |