வட மாகாண மக்களுக்கு சீன அரசின் வீட்டுத் திட்டம்: இலங்கைக்கான சீன தூதுவர் (Photos)
வட மாகாண மக்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று (05.11.2023) வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு என்பது மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீண்டகால உறவாகும்.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் உள்ள மக்கள் எப்படியான சவால்கள் மற்றும் பிரச்சினைகளை எதிர் நோக்கினாலும் அதற்கு தீர்வு காணும் வகையில் சீனா அரசாங்கம் கடந்த காலத்திலும், தற்காலத்திலும் செயற்படுவதுடன், எதிர்காலத்திலும் அதற்காக செயற்படும்.
அந்தவகையில் சீனா எப்பொழுதும் உங்களோடு கைகோர்த்து நிற்கும். கோவிட் தொற்றுக் காலத்தில் இலங்கைக்கு சீன அரசாங்கம் சினோபாம் தடுப்பூசி மருந்தை வழங்கியிருந்தது.
இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சீனா எப்பொழுதும் உதவும்.
அதாவது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சீனா தான் முதன் முதலாக இலங்கையுடன் உடன்படிக்கை செய்து கொண்ட நாடு.
இந்த உடன்படிக்கை செய்வது தொடர்பில் சில பிரச்சனைகள் கூட காணப்பட்டன. இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற சீனா அரசாங்கம் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
நிவாரண பொதி
500 குடும்பங்களுக்கு வவுனியாவில் நிவாரண பொதிகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். ஒவ்வொன்றும் 7500 ரூபாய் பெறுமதியானவை. கடந்த காலங்களில் சீன தூதுவராலயத்தின் மூலம் நீர் சுத்திகரிக்கும் இயந்திரங்களை வடமாகாணத்தில் வழங்கியிருந்தோம்.
நாங்கள் எங்களது சகோதர சகோதரரிகளுக்கு உதவுவதில் அக்கறை கொண்டுள்ளோம். சீனா அரசாங்கம் 155 மில்லியன் ரூபாயை வடக்கு மாகாணத்தில் செலவு செய்யவுள்ளது. அதில் நிவாரணப் பொதிகள் வழங்குவது மட்டுமன்றி மீன்பிடி வலைகள் பெறுவதற்கும் பயன்படுத்தவுள்ளோம்.
மிகுதிப் பணத்தில் வடமாகாணத்தில் வீடு அமைக்க திட்டமிட்டுள்ளோம். நாங்கள் தற்போது இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவ முன்வந்துள்ளோம். அவர்கள் எதிர்காலத்தில் சந்தோசமான வாழ்க்கையை வாழ்வார்கள் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இந்நிழ்வில் சீனா தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி, வவுனியா உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, வவுனியா மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர்கள், சீன தூதுவராலய அதிகாரிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி விஜயம்
இலங்கைக்கான சீனதூதுவர் Qi Zhenhong உள்ளிட்ட குழுவினர் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு சென்றுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் மேற்படி குழுவினரை மாவட்ட அரசாங்க அதிபர்.றூபவதி கேதீஸ்வரன் வரவேற்றதை தொடர்ந்து அரச அதிபர் அலுவலகத்தில் Mr.Qi Zhenhong( Ambassador of China ti Sri Lanka)Mrs.Jin Qian(Ambassador's spouse),Mr. Chen Xiangyuan(Counselor),Mr. Jin Enze( Third Secretary),Mr. Ye Zi(Third Secretary) உள்ளிட்ட குழுவினர் மாவட்டம் தொடர்பான விடயங்கள் மற்றும் அபிவிருத்தி விடயங்கள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபருடனான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மேற்படி கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.S.முரளிதரன்,தூதரக அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள், ஆகியோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி-யது
