பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார பணியாளர்கள் போராட்டம்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கனிஸ்ட சிற்றூழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வாரத்தில் ஐந்து நாள் வேலை நாட்களாக மாற்றுதல், மின்கட்டணத்தை குறைத்தல் ஆளணி பற்றாக்குறையை நீக்குதல், கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளன் றுக்சான் வெல்லனவை பதவி நீக்க கோரியே போராட்டம் இடம் பெறுகிறது.
கனிஸ்ட ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதால் மருத்துவ சிகிச்சைகள் இடம் பெறவில்லை இதனால் நோயாளர்கள் அவதிக்குள்ளானதுடன் திரும்பிச் செல்கின்றனர்.
மன்னாரிலும் போராட்டம்
மன்னார் பொது வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(23) காலை 7.30 மதியம் 12 மணி வரை அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
அதிகரித்துள்ள மின் கட்டணத்திற்கு எதிராகவும், அரச வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்து தட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க கோரியும் சுகாதார பணியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய கோரியும், சுகாதார துறையினருக்கும் பொது மக்களுக்கும் ஏற்பட்டுள்ள வரிச்சுமையை குறைக்குமாறு வழியுருத்தி மன்னார் பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலதிக நேர கொடுப்பனவை வரையறை இன்றி வழங்கு,அதிகரித்த மின் கட்டணத்தை நீக்கு, சிற்றூழியர்களை அடக்கி ஆழாதே,அரசே அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கு,நியாயமற்ற வரிக்கொள்கையை நீக்கு போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே நேரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து தராது விட்டால் விரைவில் அனைத்து ஊழியர்களும் இணைந்து சுகயீன போராட்டம் ஒன்றை முன்னெடுக்க போவதாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களும் போராட்டத்தில்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் குறித்த போராட்டம் இன்று இடம்பெற்றது.
யாழ். போதனா வைத்தியசாலையில் பணி பகிஸ்கரிப்பு
சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்று காலை 7 மணி முதல் 12 மணிவரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.
மேலதிக நேரக் கொடுப்பனவை வரையறுத்தல் தொடர்பான சுற்றறிக்கையை நீக்குதல் , மின் கட்டணத்தை குறைத்தல் உட்பட தாம் முன்வைத்த 8 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகள முன்வைத்து ஊழியர்கள் போராட்டம்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (23.02.2023) காலை 9.30 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து , வாழ்வாதாரத்தினை அதிகரி, வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தினை குறை, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டம் பேரணியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலிருந்து ஆரம்பமாகி சுற்றுவட்டத்தினூடாக ஏ9 வீதியிலுள்ள வைத்தியசாலையின் ஊழியர் நுழைவாயிலை வந்தடைந்து அதன் வாயிலில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு
9 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து சுகாதார சேவை தொழிற்சங்கம் ஒன்றிணைப்பு இன்று மேற்கொண்ட தொழிற்சங்க போராட்டத்தினை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சுகாதார ஊழியர்களும் மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்ககத்தின் நியாயமற்ற வரிக்கொள்கையினை நீக்குதல் மற்றும், அதிகரித்துள்ள மின் கட்டணத்தினை குறைத்தல்,வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக பிரகடனம் செய்தல்,வங்கி வட்டி வீதத்தினை குறைத்தல்,சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து இடமாற்றத்தினை முறையாக செயற்படுத்தல்,மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையினை விரைவாக சரிசெய்தல் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினையும் மேற்கொண்டுள்ளனர்.