குறிஞ்சாக்கேணி பாலத்தினை நிர்மாணிக்க சவூதி அபிவிருத்தி நிதியம் நிதி உதவி
குறிஞ்சாக்கேணி பாலத்தினை நிர்மாணிக்க சவூதி அபிவிருத்தி நிதியம் (SFD) நிதி உதவி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட குறிஞ்சாக்கேணிப் பாலத்தினை நிர்மாணிப்பது தொடர்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரிடம் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று இலங்கையின் நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி பெற்றுக்கொள்வது தொடர்பாக சவூதி அபிவிருத்தி நிதியத்தின் (SFD) பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று நெடுஞ்சாலை அமைச்சில் நடைபெற்றது.

போக்குவரத்து பாதிப்பு
இதன்போது குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிப்பதற்கான நிதி உதவியினை வழங்குவதற்கு சவூதி அபிவிருத்தி நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு தொடக்கம் குறித்த பாலம் சேதமடைந்து போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பாலத்தைப் பயன்படுத்த முடியாத நிலை காரணமாக அப்பகுதியில் படகுப் பாதைகள் ஊடாகவே போக்குவரத்து நடைபெறுகின்றது.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 21ம் திகதி குறித்த பாலம் அமைந்துள்ள பிரதேசத்தை படகு வழியாக கடக்க முயன்ற பாடசாலை மாணவர்கள் 09 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த பெரும் சோகம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது