ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட உலங்கு வானூர்திகள் தொடர்பாக நாடாளுமன்றில் வாதம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட உலங்கு வானூர்திகள் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இந்த விவாதம் இடம்பெற்றது. இலங்கை வான்ப்படை ஜனாதிபதிக்கு வழங்கிய சேவைகள் குறித்தே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஏறக்குறைய 10லட்சம் ரூபா வரையில் அரச நிறுவனங்களிடம் இருந்து இலங்கையின் வான்படைக்கு நிலுவை உள்ளது. இந்தநிலையில் ஜனாதிபதியின் அலுவலகத்தால் வான்படையின் சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து வித்தனகே கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதியின் சுற்றுப்பயணத்தின்போது ஏன் இரண்டு உலங்கு வானூர்திகள் வழங்கப்பட்டன என்று அவர் கேட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தல்களின் போது அரச சொத்துக்களின் பயன்பாட்டைக் குறைப்பதாக உறுதியளித்ததார்.
எனினும் ஜனாதிபதி இதுவரை தனது பதவிக் காலத்தில் இதுபோன்ற மாற்றங்களைச் செய்திருக்கிறாரா என்று நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
இந்தக்கேள்விகளுக்கு பதிலளித்த ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு நோக்கங்களுக்காகவே ஜனாதிபதிக்கு இரண்டு உலங்கு வானூர்திகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சாலைகளில் பயணிக்கும்போது ஜனாதிபதி மூன்று வாகனங்களுடன் மட்டுமே பயணிக்கிறார் என்று சமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.