இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பச்சுட்டெண்! பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
நாட்டின் பல பகுதிகளுக்கு, இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வெப்பமான வானிலைக்கான 'அம்பர்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர்கள் முன்னெச்சரிக்கை மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் மொணராகலை மாவட்டத்திலும் பகல் வேளையில் வெப்பச்சுட்டெண் 'கவனம்' (Caution) செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டும் என அறிவுறுத்தியுள்ளது.
விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தல்
எனவே பொதுமக்கள் போதியளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுமாறும், அதிக சிரமமான வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளுமாறும், முடிந்தவரையில் நிழலான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், நிலவும் வானிலை குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.