இலங்கையில் பெண்களுக்கான சுகாதார திட்டங்களை நடைமுறைப்படுத்த அவதானம்
இலங்கையில் பெண்களுக்கான சுகாதார துவாய்களை ( Sanitary Pads) தயாரிக்கும் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய தொழில்முனைவரான அருணாசலம் முருகநாதனுடன் கலந்துரையாடல் தொடர்கிறது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரேமநாத் தொலவத்த, ரோகினி கவிரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று சபையில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல,
இலங்கையில் சமீபகாலமாக எழுந்துள்ள சில பிரச்சினைக்கு தீர்வாக இந்தத் திட்டம் இருக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
கலாச்சார மற்றும் சமூக கட்டுப்பாடு
இது இலங்கையில் உள்ள இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.இருப்பினும் இது எங்கள் கலாச்சார மற்றும் சமூக கட்டுப்பாடுகளின் விளைவாக இலங்கையில் அடிக்கடி பொதுமக்கள் மத்தியில் பரவலாக இது விவாதிக்கப்படவில்லை, என்று அமைச்சர் கூறினார்.
பெண்கள், தாங்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான இந்த சுகாதார துவாய்களை பெற்றுக்கொள்ள முடியாததால் அவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதைத் தவிர்ப்பது கவலையளிக்கிறது. என்று சுகாதார அமைச்சர் கூறினார்.
சானிட்டரி பேட் என்ற சுகாதார துவாய்களுக்கு 42வீத வரி விதிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார். இதுவே அவற்றின்; விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது இந்த விடயத்தை எடுத்துக் கூறியபோது தாம் கேலிக்குள்ளாக்கப்பட்டதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று அது தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளது என்று தெரிவித்தார்.
எனவே குறைந்தபட்சம் செனிட்டரி பேட்களுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்க
அரசாங்கம் ஏதாவது ஒரு தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் கோரிக்கை
விடுத்தார்.