ஹட்டன் போடைஸ் பகுதியில் வெள்ளம் - 50 குடும்பங்கள் பாதிப்பு
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக அங்கு அமைந்துள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்கு உள்ளும் உட்புகுந்ததால் 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளர்.
இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களைச் சந்தித்து வருவதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு ஹட்டன் - டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியிலான வீதி நீரில் மூழ்கியதால் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும், பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு நேற்று இரவு விஜயத்தை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து குறித்த ஆற்றினை அகலப்படுத்தி இப்பிரதேசத்திற்கு வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
இவ் ஆறானது காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கி வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.








