ஹட்டன் பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு - சாரதி கைது
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளது என ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை, டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று டிக்கோயா பட்டல்கல பகுதியில், வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இருவர் உயிரிழப்பு
இந்த விபத்தில், காயமடைந்த சுமார் 34 பேர், உடனடியாக அருகிலுள்ள கிளங்கன் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, இந்த விபத்தில் பலத்த காயமடைந்திருந்த அக்கரப்பத்தனை, வெவர்லி பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில், விபத்தில் காயமடைந்த 66 வயதான டிக்கோயா தோட்டத்தைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பழனி லூகாஸ் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (02) உயிரிழந்தாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்வடைந்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
குறித்த பேருந்து விபத்தில் காயமடைந்து டிக்கோயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாரதி (02) அன்று மருத்துவமனையிலிருந்து சிகிச்சையின் பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும், அவர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படுவார் என்றும் ஹட்டன் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தனர் .
இதற்கிடையில், விபத்து குறித்து பேருந்தின் தரத்தை பரிசோதனை செய்த நுவரெலியா மாவட்ட பிரதம மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார, விபத்தில் சிக்கிய பேருந்தில் எந்த இயந்திரக் கோளாறும் இல்லை என்றும், சாரதியின் கவனக்குறைவான செலுத்துதலே விபத்துக்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.







