நடுத்தரக் குடும்பம் ஒன்றின் வருமானத்தை விடவும் செலவு 18,170 ரூபாவினால் உயர்வு!
நாட்டின் சாதாரண நடுத்தர வருமானம் பெறும் குடும்பம் ஒன்றின் மாதாந்த வருமானத்துடன் ஒப்பிடுகையில், அதன் செலவு 18,170 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டில் சாதாரண நடுத்தரக் குடும்பம் ஒன்றின் மாதாந்த வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் 5,700 ரூபா சேமிப்பு காணப்பட்ட போதிலும், தற்போது அந்த நிலைமை முற்றாகத் தலைகீழாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் உருவாகியுள்ள 18,170 ரூபா மாதாந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக, மக்கள் கடன் வாங்கவோ, தமது அன்றாடச் செலவுகளைக் குறைக்கவோ அல்லது பெறுமதியான சொத்துக்களை அடகு வைக்கவோ வேண்டிய கடும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்ட யோசனைகள் ஊடாக மக்கள் எதிர்பார்த்த நிவாரணங்கள் எவையும் கிடைக்கவில்லை எனவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சாடினார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான வரிகளை நீக்குதல் மற்றும் வற் வரியை பூஜ்ஜியமாக்குதல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் எதிர்நோக்கும் உண்மையான பொருளாதாரக் கஷ்டங்களைக் கருத்திற் கொண்டு நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.