கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் ஒரு பார்சலிலிருந்து துப்பாக்கி
கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு பொதியில் தானியங்கி துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் அடங்கிய பொருட்களை கைப்பற்றியுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் இன்று (01.07.2025) நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள மத்திய தபால் நிலையத்தில் வைத்து சந்தேகத்திற்கிடமான பொதியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள்
இதன்படி கடந்த மார்ச் 19 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கிடைத்த சந்தேகத்திற்கிடமான ஒரு பொதி, வெலிகல்லவைச் சேர்ந்த உமேஷ் மயந்த என்பவரின் முகவரிக்கு அனுப்பப்படவிருந்த நிலையில் அதிலும், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பில் உதவி சுங்க கண்காணிப்பாளர் இமல்கா துல்மினி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டது.
திருத்தப்பட்ட வெடிபொருள் கட்டளைச் சட்டம் 1969 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, 1976 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, மற்றும் 1978 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, 27 ஆம் இலக்க ஆகியவற்றின் படி விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்வாறு கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் உயிருள்ள வெடிமருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசு ஆய்வாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.