அரசின் அணுகுமுறை தொடர்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு கவலை
அரசாங்கம் மாறினாலும் சிவில் சமூகத்தின் மீதான அரசின் அணுகுமுறை மாறவில்லை என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர்களான யாட்சன் பிகிறாடோ மற்றும் கலைவாணி பூபாலப்பிள்ளை ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
“திருகோணமலை மூதூரில் வசிக்கும் 61 வயதான அஞ்சலிதேவி நவரெத்தினம் (அஞ்சலி) என்பவர் நாளை புதன்கிழமை (4) காலை 10 மணிக்கு விசாரணைக்காக 'TID' அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் 'TID' கிளை இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
விசாரணை
அஞ்சலி, திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் (TDWN) நிறுவனர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் ஆவார்.
அஹம் மனிதாபிமான வள மையத்தின் (AHRC) திருகோணமலையின் நிறுவனர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவில் ஒருவரும், மனித உரிமைகள் பாதுகாவலரும் சமூக சேவகியும் ஆவார்.
ஏற்கனவே, பிப்ரவரி 7, 2024 அன்று அவர் தனது பணி தொடர்பாக 'TID'ஆல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அணுகுமுறை மாறவில்லை
கடந்த காலங்களில் பொலிஸாரும் உளவுத் துறையினரும் பலமுறை அவரது வீட்டுக்குச் சென்று, அவரது மற்றும் குடும்பத்தினரின் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு இடையூறு விளைவித்து, வீட்டிற்குள் நுழைந்து அவரது வேலையைப் பற்றி விசாரித்தனர்.
அரசாங்கம் மாறினாலும் சிவில் சமூகத்தின் மீதான அரசின் அணுகுமுறை மாறவில்லை. அரச அதிகாரிகளின் தொடர்ச்சியான சிவில் சமூக விரோத அணுகுமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரமான செயற்பாடுகளை மீறுவதை நிறுத்துவதற்கு தேவையான அனைத்து அரசாங்க அதிகாரிகளும் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |