மின்சாரப் பேருந்துகள் கொள்வனவு திட்டத்தில் அரசாங்கம் அசமந்தப்போக்கு
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போக்குவரத்தில் ஈடுபடுத்தும் நோக்கில் மின்சாரப் பேருந்துகள் கொள்வனவுக்கான திட்டத்தில் அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் அசிரத்தை காட்டுவதாக கணக்காய்வாளர் நாயகம் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசத்தில் 200 மின்சாரப் பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் குறித்த கணக்காய்வு அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தெரியவந்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்காக 200 மின்சாரப் பேருந்துகளை வாங்கும் திட்டம், அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருந்தபோதிலும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் செயல்படுத்தப்படவில்லை என்று தேசிய கணக்காய்வு நாயகம் அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.
மின்சாரப் பேருந்து
இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாடு, அவற்றின் பயன்பாட்டிற்குப் பிந்தைய முகாமைத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து வெளியிடப்பட்ட ஒரு சிறப்புக் கணக்காய்வு அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.
இந்த 200 மின்சாரப் பேருந்துகளும் கொழும்பு பெருநகரப் பகுதி மற்றும் கம்பஹா மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படத் திட்டமிடப்பட்டிருந்தன.

எரிபொருள் இறக்குமதியைக் குறைத்தல், காற்று மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைச் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக இருந்தன.
இருப்பினும், மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான முன்மொழிவுக் கோரிக்கை ஆவணங்களைப் பத்து ஏலதாரர்கள் வாங்கியிருந்தபோதிலும், ஒரே ஒரு ஏலதாரர் மட்டுமே முன்மொழிவைச் சமர்ப்பித்திருந்தார் என்று கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.