ஈஸ்டர் தாக்குதலுடன் ஹரின் பெர்னாண்டோவை சம்பந்தப்படுத்த முயற்சிக்கும் அரசாங்கம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பிரதான சூத்திரதாரியை இரண்டு வாரங்களில் கைது செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் ஹரின் பெர்னாண்டோ போன்றவர்கள் இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் எனக் காட்ட முயற்சித்து வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் நலன் அறிய நேற்று அங்கு சென்று இருந்த நாணயக்கார, செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனைக் கூறியுள்ளார்.
குண்டு தாக்குதலை நடத்தியது சஹ்ரான்கள் அல்ல ஹரின் பெர்னாண்டோ போன்றவர்கள் எனக் காண்பிக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறதோ என்ற பலத்த சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
ஒரு தரப்பினரை மகிழ்விக்கவும், அரசாங்கத்தின் தேவைக்கு அமைய அரசாங்கத்திற்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மழுங்கடிக்கவே எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வேட்டையாட ஆரம்பித்துள்ளனர் எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.