69 இலட்சம் மக்களின் ஆணைக்கு எதிராக அரசு! - அமைச்சர் உதய கம்மன்பில
இலங்கையில் 69 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக அரசு செல்கின்றது.அரசுக்குள் நாங்கள் ஒரு போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்பது உண்மை தான் என அமைச்சர் உதய கம்மன்பில ஒப்புக்கொண்டுள்ளார். கொழும்பில் இன்று நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசுக்குள் ஒரு உள் பிளவு இருக்கின்றதா என்று சிலர் எங்களிடம் கேட்கின்றார்கள். நாங்கள் அரசுக்குள் ஒரு போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம் என்பது உண்மை தான். ஆனால், அந்தப் போராட்டம் அரசை அழிப்பதற்கான போராட்டம் அல்ல.
மாறாக மக்கள் அளித்த ஆணை மற்றும் அவர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதற்கான போராட்டத்தையே நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.
மக்களின் ஆணையை நாங்கள் மதிப்பது என்றால் எங்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் ஆணையை மதிக்க வேண்டும்.பெறப்பட்ட ஆணையை நாங்கள் பாதுகாக்கின்றோம் என்றால், அரசமைப்பின் 20ஆவது திருத்தம் அது வந்த வழியில் வந்திருக்காது.
நாங்கள் ஆணையைப் பாதுகாக்கின்றோம் என்றால், கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்கும் எண்ணம் கூட இந்த அரசின் தலைவர்களின் மனதில் வந்திருக்காது.
அவர்கள் ஆணையைப் பாதுகாக்கின்றார்களானால், நமது அரசியல் தலைவர்கள் சட்டம், ஒழுங்கைத் துன்புறுத்தும் முடிவுகளை எடுக்க மாட்டார்கள்.
இந்த அரசை ஆட்சிக்குக் கொண்டுவர பணியாற்றிய முன்னோடிகள் என்ற வகையில்,அவர்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் விருப்பத்துக்கு எதிராகச் செல்லும் அரசின் தவறுகளைச் சரிசெய்வது எமது கடமை என்றார்.