சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்க அனுமதி கோரும் கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
சிங்கப்பூரில் இருக்கும் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கை திரும்பவிருந்தார்.
எனினும் அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய அவர் இந்த மாத இறுதி வாரம் வரை சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி இலங்கையில் நடந்த போராட்டங்கள் காரணமாக ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச, நாட்டில் இருந்து தப்பிச் சென்றார்.
மாலைதீவில் தங்கியிருந்த அவர், அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் 14 நாட்கள் தங்கியிருக்க மாத்திரமே விசா வழங்கப்பட்டது.
அவரது விசா காலம் முடிவடையவுள்ள நிலையில் விசா அனுமதியை நீடிக்குமாறு சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து, பின்னர் தமது வீசாவை அவர் நீடித்துக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் விரைவில் அவர் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியான அதேநேரம் தற்போது அவர் நாடு திரும்புவதற்கு உகந்த நேரம் அல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.