கோட்டாபய பதவி விலகிய பின்னர் எடுக்கப்பட்ட உடனடி தீர்மானம்! ரணில் வழங்கிய ஒப்புதல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை விட்டு விலகியவுடன், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் யாரும் ஜனாதிபதி பதவியையோ அல்லது பிரதமர் பதவியையோ ஏற்றுக் கொள்வதில்லை என்ற தீர்மானத்தினை எடுத்தோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னாள் நல்லாட்சி அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் இருந்தபோது, அந்த முழு அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் நாம் விமர்சித்தோம். அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவும் அரசியல் மேடைகளில் பேசினோம்.
ரணிலின் செயற்பாடு தொடர்பில் மகிழ்ச்சியடைகிறோம்
இறுதியாக கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய முடிந்தது. அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முழு அமைச்சரவையும் தமது பதவிகளை துறந்ததுடன், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் ஜனாதிபதி பதவியையோ அல்லது பிரதமர் பதவியையோ ஏற்றுக் கொள்வதில்லையெனத் தீர்மானித்தோம்.
அவ்வாறு கூறியதன் மூலம், அமைச்சுப் பதவிகளைப் ஏற்றுக்கொண்டு நாட்டை தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீட்டெடுக்க கைகோர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமும் பகிரங்க வேண்டுகோள் விடுத்தோம்.
வெறும் விமர்சனங்களோடு மட்டும் நின்று அந்த சவாலை ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் சில தயங்கின. எவ்வாறாயினும், முக்கியமான தருணத்தில் சவாலை ஏற்க ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டார்.
பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை நாம் பேணி வந்தாலும், நாட்டில் ஸ்திரமற்ற சூழ்நிலையை உருவாக்குவதற்கு எங்களால் இடமளிக்க முடியாது. நாட்டுக்கே முன்னுரிமை என்பதே எங்களின் அதிகபட்ச நடவடிக்கையாக என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே, ஒளிந்து கொள்ளாமல் சவால்களை எதிர்கொண்டு நாட்டிற்காகச் செயற்பட முன் வந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டவருக்கு எமது முழு ஆதரவையும் வழங்குவதற்கான அரசியல் நிலைப்பாட்டை எட்டினோம்.
அதனால்தான் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு எமது கட்சி முழுமையான ஆதரவை நாடாளுமன்றத்தில் வழங்க முடிவு செய்தது. ஜனாதிபதி மேற்கொண்டுள்ள முன்னேற்றம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவித்துள்ளார்.